ஜெர்மனியில் நடைபெறும் கிரென்கா கிளாசிக் செஸ் போட்டித் தொடர் 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார்.
வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் இந்தத் தோல்வியினால் 6-வது இடத்தில் உள்ளார். இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த்.
இந்த முறை கார்ல்சன், ஆனந்தின் உத்திகளை முன்னமேயே கணித்து விட்டது போலவே இருந்தது. ஆனந்தின் காய்கள் உள்ளே நுழையாதவாறு கல்கோட்டைத் தடுப்பணை அமைத்தார். தொடக்கத்தில் ஆனந்துக்கு அனுகூலமான நிலைமைகள் இருந்தது. செஸ் போர்டின் மையப்பகுதி காய்கள் நகர முடியாதவாறு இறுக்கமாக அமைந்தது.
ஆனால், கார்ல்சன் இறுக்கத்தை உடைக்க தனது ராணியின் பக்கத்தில் இருந்த சிப்பாயை 6-வது ரேங்கிற்கு முன்னேற்றினார். அதுவரை எந்த வித திட்டமிடுதலையும் செய்யாமல் காய்களை நகர்த்திய கார்ல்சனுக்கு திடீரென இந்த சிப்பாய் அதிரடி வாய்ப்புகளை அளித்தது. இந்த நிலையில் ஆனந்த் ஆட்டத்தில் தோல்வி என்ற நிலையையே எதிர்கொண்டிருந்தார்.
ஆனாலும், கார்ல்சனின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு வாய்ப்பு ஆனந்தின் கவனத்திற்கு ஏனோ வரவில்லை. 32-வது நகர்த்தலில் ஒரு பெரிய தவறைச் செய்தார் ஆனந்த். அடுத்த 4 நகர்த்தல்களில் ஆட்டம் முடிந்து போனது, ஆனந்த் தோல்வி தழுவினார்.
ஒரு நேரத்தில் ஆட்டத்தை மாற்ற வேறு வாய்ப்புகள் இருந்தும் ஆனந்த் தனது குதிரையால் கார்ல்சனின் கருப்பு பிஷப்பை வெட்ட, அருகில் இருந்த ராணியால் ஆனந்தின் குதிரை வெட்டப்பட்டது. இந்த வெட்டுகள் தேவையற்றது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் கார்ல்சன் எஃப்-5-இல் மற்றும் எச்-5-இல் சிப்பாயை முன்னே நகர்த்தினார். அது ஒரு சூழ்ச்சியான நகர்த்தலே. அதாவது கார்ல்சன் ஆனந்தின் கவனத்தை சாதுரியமாக மாற்றியதாகவே தோன்றியது. எஃப்.5-இல் சிப்பாய் முன்னேற்றப்பட்டதில் பதட்டமடைந்த ஆனந்த் சி-3-யில் இருந்த தனது பிஷப்பை, பின் பக்கமாக நகர்த்தி எ-1 என்ற முதல் வரிசைக்குக் கொண்டு வந்தார்.
இது கார்ல்சனுக்கு ஈ-7-இல் இருந்த தனது சிப்பாயை ஈ-5க்கு கொண்டு வர வழிவகை செய்தது. இப்போது டி5, ஈ5, எஃப்5 ஆகிய கட்டங்களில் வரிசையாக் கார்ல்சனின் பான்கள் அணி வகுத்தன. இந்த நிலையிலிருந்து ஆனந்த் தொடர்ந்து தவறுகளைச் செய்தார். கடைசியில் கார்ல்சனின் ராணியை வெட்டியும் ஏ-7-இலிருந்து கார்ல்சனின் பான் ஆனந்தின் பகுதியான ஏ-1-ற்கு முன்னேறியது. இந்த நிலையில் ஆனந்தினால் ஒன்றும் செய்ய முடியாமல் போக கார்ல்சன் எளிதாக வென்றது போலவே தெரிந்தது.
சுருக்கமாக கூறவேண்டுமெனில் சில வழக்கத்துக்கு மாறான நகர்த்தல்களை தொடக்கம் முதலே கார்ல்சன் செய்தார். அதன் பின்னணியில் பெரிய திட்டம் இருப்பது போல் ஆனந்தைக் குழப்பியது போலவே தெரிகிறது. டீசர் மூவ்கள் சிலவற்றைக் கார்ல்சன் செய்ய அதனை ஏதோ பெரிய பின்னணி கொண்ட உத்திகளாக ஆனந்த் நினைத்து ஆடியது போலவே தெரிகிறது.
ஜெர்மனி வீரர் ஆர்காதி நைடிஷ் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சன் மற்றும் இத்தாலி வீரர் ஃபேபியானோ கரவ்னா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.