மேட்ச்-பிக்சிங், ஸ்பாட்-பிக்சிங் அச்சுறுத்தல் மிகுந்த கிரிக்கெட் ஆட்டத்தில் ‘பிட்ச் சைடிங்’ என்ற புதிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'பிட்ச் சைடிங்' என்ற வார்த்தை குறிக்கும் புதிய மோசடி என்னவெனில், பொதுவாக மைதானத்தில் ஆட்டத்தின் நிகழ்வுக்கும் அது நேரடி ஒளிபரப்பில் வருவதற்கும் இடையே ஒரு 15 வினாடிகள் அவகாசம் உள்ளது. இந்த மிகக்குறுகிய கால அவகாசத்தைப் பயன்படுத்தி மைதானத்திலிருந்து ஆட்டம் பற்றிய தகவல்களை சட்ட விரோத சூதாட்டத் தரகர்களுக்கு அளிக்கும் விவகாரமே ‘பிட்ச் சைடிங்’.
இதனை கடுமையாகக் கண்காணிக்க நடப்பு உலகக்கோப்பையில் ஐசிசி-யின் ஊழல் தடுப்பு அமைப்பு களமிறங்குகிறது.
சமீபத்திய நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது இத்தகைய பிட்ச் சைடிங் மோசடி செய்து கொண்டிருந்த நபரை மைதானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். கேமராக்கள் அவரை துல்லியமாக அடையாளம் காட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னதாக, இதுவும் சமீபத்தில் நடந்ததுதான். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐபிஎல் பாணி பிக் பாஷ் இருபது ஓவர் உள்நாட்டு போட்டித் தொடரின் போது பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் மைதானத்திலிருந்து 15 வினாடி இடைவெளியைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்பியது தெரியவர, அவர் எந்த ஒரு போட்டியிலும் மைதானத்தில் நுழைய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்தது.
இந்த புதிய அச்சுறுத்தல் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வாரியங்கள் அதிகாரிகளுக்கு பட்டறை ஒன்றை நடத்தி அதனை விளக்கியுள்ளனர்.
இதனால் உலகக்கோப்பை போட்டிகள் முழுதும் மைதானத்தில் ரசிகர்கள் பக்கம் கேமராவின் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து காவல்துறையினர் இதனைத் தடுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.