விளையாட்டு

குருவுக்கு பாடம் நடத்திய சீடன்: சக்லைனை நோகடித்த அஜ்மல்

பிடிஐ

மூத்த வீரர்கள் சிலர் தங்கள் நடத்தை மற்றும் பேச்சில் முதிர்ச்சி காட்டுவது அவசியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டித்திருப்பதில் காரணம் இல்லாமலில்லை.

பாக்.கிரிக்கெட் வாரியம் இப்படிக் கூறியதற்குக் காரணம் அதன் மூத்த வீரரான அஜ்மல்.

சயீத் அஜ்மல் வீசும் பந்துகள் 100% விதிமுறைகளை மீறுவதாக உள்ளன என்று ஐசிசி பந்துவீச்சுக் கண்காணிப்புக் குழு கூறி அவர் பந்துவீசத் தடை விதிக்கப் பரிந்துரை செய்து, சயீத் அஜ்மலும் தடை செய்யப்பட்டார்.

அதன் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அஜ்மல் தனது த்ரோ-வை செய்து கொள்வதற்கு உதவுமாறு முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் தற்போது பல்வேறு தரப்பில் பயிற்சியும் அளித்து வரும் சக்லைன் முஷ்டாக்கை நியமித்தது.

இங்குதான் வேடிக்கை தொடங்கியது. அதாவது தான் எதற்காக தடை செய்யப்பட்டிருக்கிறோம், மூத்த வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் எதற்கு வந்திருக்கிறார் என்பதையெல்லாம் நன்கு அறிந்தவர்தான் சயீத் அஜ்மல். மேலும் சக்லைன் முஷ்டாக்தான் தன் பந்துவீச்சுக்கு அகத்தூண்டுதலாகத் திகழ்பவர் என்றெல்லாம் அஜ்மல் முன்பு கூறிய காலங்களும் உண்டு.

ஆனால், இப்போது பந்துவீச்சைத் திருத்த வந்த சக்லைனுக்கே ஸ்பின் பந்துவீச்சு பாடம் புகட்டியுள்ளார். நொந்து போன சக்லைன் நேராக பாக். கிரிக்கெட் வாரியத்தை அணுகியுள்ளார்.

இதுகுறித்து, பாக். கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சயீத் அஜ்மல் தனது பந்துவீச்சைத் திருத்தும் நடவடிக்கையின் போது கூட, சக்லைன் முஷ்டாக் உதவியை நாடி இதற்கென்றே அவரை நியமித்துள்ளோம் என்று தெரிந்துமே அஜ்மல் நடந்து கொண்டது எங்களுக்கு வியப்பை அளித்தது. சக்லைன் எங்களிடம் வந்தார், 'நான் அஜ்மலுக்கு உதவிபுரிய வந்தேனா, அல்லது அவரிடமிருந்து பந்துவீச்சு கற்றுக் கொள்ள வந்தேனா?’ என்று கேட்டார்.

சக்லைன் கூறும் ஆலோசனைகளைக் கேட்பதற்குப் பதிலாக சக்லைன் முஷ்டாக்குக்கு அஜ்மல் பவுலிங் டிப்ஸ் வழங்கியுள்ளார். அதன் பிறகு அஜ்மலை அழைத்து நாங்கள் விளக்க நேரிட்டது.” என்றார் அந்த மூத்த அதிகாரி.

SCROLL FOR NEXT