உலகக்கோப்பை போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்ய தனி சேனலை தொடங்க சாத்தியமில்லை என்று பிரசார் பாரதி இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
முன்னதாக, 19-ஆம் தேதி வரை கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்ப அனுமதியை நீட்டித்த உச்ச நீதிமன்றம் அப்போது, தனி சேனல் தொடங்கி அதில் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப வாய்ப்பிருக்கிறதா என்று தெரிவிக்கக் கோரியிருந்தது.
இந்த நிலையில் இந்த விசாரனை இன்று ரஞ்சன் கோகாய், பிரஃபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வின் முன் வந்தது.
அப்போது தூர்தர்ஷன் தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, தனி சேனல் தொடங்க சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பிரசார் பாரதியின் நேரடி ஒளிபரப்பு உரிமை மீதான தனது தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
அட்டார்னி ஜெனரல் ரோஹ்டாகி கூறும் போது, “தூர்தர்ஷனிடத்தில் மொத்தம் 1,400 டிரான்ஸ்மீட்டர்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை நாட்டின் மூலை முடுக்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தனி சேனல் தொடங்குவது கடினம். போட்டிகளை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏன் அவதிப்படவேண்டும், போட்டிகளைக் கண்டு களிக்க அனைவருக்கும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.” என்றார்.
ஆனால், இதனை மறுதலித்த ஸ்டார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் பி.சிதம்பரம், “2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போதும் இதே நிலைமை ஏற்பட்டது, அப்போது 6 நாட்களில் தனி சேனல் உருவாக்க முடிந்துள்ளது. இப்போது ஏன் முடியாது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "தூர்தர்ஷனுக்கு இது தொடர்பாக நாங்கள் (ஸ்டார் இந்தியா) உதவத் தயாராக இருக்கிறோம். தொழில்நுட்ப உதவிகளையும் செய்கிறோம். மேலும் இந்த தனிச் சானல் தூர்தர்ஷன் இயங்கும் அலைவரிசையிலேயே கொடுக்கப்பட முடியும். கூடுதல் செலவும் தேவையில்லை.
போட்டிகளைப் பார்க்க டிராய் ஒழுங்கு விதிகளின் படி ஒருவர் ரூ.16 செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தீர்மானமான முடிவு எட்டப்படாவிட்டால் ரூ.290 கோடி இழப்பு ஏற்படும்.
இந்த நாட்டுக்கு ஒரு முதலிட்டாளர் வந்து முதலீடு செய்யக் காரணம் அது அவருக்கு லாபகரமாக அமையும் என்பதாலேயே. நாங்கள் இதற்காகவே நிறைய பேரை பணியில் அமர்த்தியுள்ளோம். இதனால் நாங்கள் உத்தேசித்த வருவாய் வரவில்லை எனில் நிறுவனம் உடைந்து விடும். காரணமில்லாமல் தனியார் கேபிள் ஆபரேட்டர்களுக்கு லாபம் போய்ச்சேரும்.
பிரசார் பாரதி விளையாட்டுகள் சட்டத்தை மீறுகிறது. எங்கள் உள்ளடக்கங்களை எடுத்துக் கொண்டு பிறருக்கு பகிர்ந்து அளிக்கிறது. இதன் மூலம் எங்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.” என்றார்.
இந்த இடத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள், “விளையாட்டுகள் சட்டம் பற்றிய பிரிவுகளைப் பற்றி நாங்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் கோரக்கூடாது. அது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது, எனவேதான் இருதரப்பினருக்கும் ஒத்துவரும் விஷயங்களை ஆலோசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.”
என்று கூறிய நீதிபதிகள் தங்கள் உத்தரவை தள்ளி வைத்தனர்.