இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்குப் பதிலாக மோஹித் சர்மா அணியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இஷாந்த் கடைசியாக பந்து வீசினார். அதன் பிறகு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் தேர்வு செய்யப்பட்டார் ஆனால் அந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஆனால், அதன் பிறகு பெர்த்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக மீண்டும் முழங்கால் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் உடற்தகுதி பரிசோதனையில் அவர் முழுதும் தகுதி பெறவில்லை என்று தெரியவந்தது. இன்று முழு இந்திய அணியும் நாளைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இஷாந்த் சர்மா பந்து வீசவில்லை. இதனையடுத்து அவர் இடம்பெறமாட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இஷாந்த் சர்மா அடுத்த வாரம் இந்தியா திரும்பவுள்ளார்.