மேற்கிந்திய தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நெல்சன் மைதானத்தில் நடந்த போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி கண்டது. இந்த உலகக் கோப்பையின் முதல் அதிர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட 305 ரன்கள் இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங், போர்டர் ஃபீல்ட் ஜோடி நிதானமான துவக்கத்தைத் தந்தனர். ஒரு ஓவருக்கு ஐந்து ரன்களுக்கும் அதிகமாக எடுத்து வந்த இந்த இணை 14-வது ஓவரில் பிரிந்தது. கெயில் வீசிய பந்தில் போர்டர்ஃபீல்ட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களத்தில் இணைந்த ஜாய்ஸ், ஸ்டிர்லிங் ஜோடி வெகு சிறப்பாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. ஸ்டிர்லிங் 19 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மறுமுனையில் ஜாய்ஸ், ஸ்டிர்லிங்கின் அதிரடிக்கு ஈடு கொடுத்து ஆடி வந்தார். துரிதமாக 39 பந்துகளிலேயே அவர் அரை சதத்தைக் கடந்தார்.
ஸ்டிர்லிங் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் ஜாய்ஸ் தனது அதிரடியைத் தொடர்ந்தார். தொடர்ந்து களமிறங்கிய நியால் ஓ பிரெய்ன் தன் பங்கிற்கு ரன்களை வேகமாக சேர்த்து 38 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒரு ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி தவறாமல் வர, அயர்லாந்து அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.
வெற்றிக்கு வெறும் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜாய்ஸ் சிக்ஸ் அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 67 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 84 ரன்களை அவர் குவித்திருந்தார். தொடர்ந்து வந்த பால்பெர்னியும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதற்குப் பின் வெகு நிதானமாகவே அயர்லாந்து அணி ரன் சேர்த்தது. 8 ஓவர்களில் 19 ரன்கள் தேவையாயிருக்க, ஓவருக்கு 2-3 ரன்கள் மட்டுமே வந்தது. 43-வது ஓவரில் வில்சன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அயர்லாந்தின் நட்சத்திர வீரர் கெவின் ஓ ப்ரெய்னும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். லேசான பதட்டம் உருவான சூழலில் அடுத்தடுத்த பவுண்டரிகள் அடித்து நியால் ஓ ப்ரெய்ன் வெற்றி இலக்கை சுருக்கினார்.
முடிவில் 45.5 ஓவர்களில் ஒரு பவுண்டரியோடு வெற்றி இலக்கைக் கடந்தது அயர்லாந்து அணி. நியால் ஓ ப்ரெய்ன் 60 பந்துகளில் 79 ரன்களுடனும், மூனி 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முன்னதாக டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மே.இ. தீவுகள் இழந்தது. ஆனால் சிம்மன்ஸ் - டேரன் சமி ஜோடி அணியின் நிலையை ஸ்திரப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 154 ரன்களைக் குவித்தனர்.
சமி 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் சதத்தைக் கடந்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். முடிவில் மே.இ. தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களை எடுத்தது.
கடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி தந்த அயர்லாந்து அணி, இந்த முறை முதல் போட்டியிலேயே மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது.