விளையாட்டு

உலகக் கோப்பையை இந்தியா தக்கவைக்க சிறப்பான பந்து வீச்சு மிக முக்கியம்: முன்னாள் வீரர் ஜவஹல் ஸ்ரீநாத் கருத்து

பிடிஐ

கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ள பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது மிகவும் அவசியம் என்று ஜவஹல் ஸ்ரீநாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீநாத், இப்போது ஐசிசி போட்டி நடுவராகவும் உள்ளார். ஹைதராபாதில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியது:

அணியின் வெற்றியில் பந்து வீச்சு என்பது மிகவும் முக்கியமானது. சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் பந்து வீச்சாளர்களே போட்டியின் முடிவை நிர்ணயிப்பவர்களாக இருந்தனர்.

பந்து வீச்சு சிறப்பாக இருக்கும்போது அங்கு பேட்ஸ்மேன்களின் வேலை சுலபமாகிவிடுகிறது. இப்போது உலகக் கோப்பை போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியாவில் பெருமளவில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே ஆடுகளங்கள் உள்ளன.

இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் உள்ளனர். உலகக் கோப்பையில் விளையாடும் மற்ற அணிகளைவிட இந்தியா அணிக்கு அங்கு கூடுதல் அனுபவம் உள்ளது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நமது வீரர்கள் அங்கு விளையாடி உள்ளனர்.

எனவே அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை நமது பந்து வீச்சாளர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். எனவே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கு சிறப்பாக செயல்படுவார்கள்.

உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று கூறப்பட்டு வந்ததை கடந்தமுறை இந்தியா முறியடித்தது. கடந்த முறை உள்நாட்டில் விளையாடுவதில் இருந்த நெருக்கடிகளை விட இப்போது நமது வீரர்களுக்கு நெருக்கடி குறைவுதான்.

அனைத்து அணிகளுக்கும் ஏற்ற இறக்கம் என்பது சகஜமானதுதான். வீரர்கள் அனைவரும் அணிக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற முழு கவனத்துடன் களமிறங்க வேண்டும்.

இதில் ஒருசிலர் சிறப்பாக விளையாடினால் ஆட்டத்தின்போக்கு மாறிவிடும். ஏனெனில் நமது அணியில் யாரும் பிற நாட்டு வீரர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT