தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாலும் மிகச் சிறந்த போராட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளது ஜிம்பாப்வே.
நியூஸிலாந்தின் ஹேமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இம்முடிவுக்கு தொடக்கத்தில் நல்ல பலன் கிடைத்தது. ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினர். க்யூ டி காக் 7 ரன்களில் வெளியேறினார். ஹசீம் ஆம்லா 11 ரன்களில் வெளியேறினார். டூ பிளெஸிஸ், அபாயகரமான வீரர் டி வில்லியர்ஸ் போன்றோரும் ரன் எடுக்கத் திணறினர். டூ பிளெஸிஸ் (24), டி வில்லியர்ஸ் (25) ரன்களில் வெளியேறினர்.
அதன் பின்னர் மில்லர்- டுமினி ஜோடி நங்கூரமாக நிலைத்து நின்றது. கடைசி வரை இந்த ஜோடியைப் பிரிக்க முடியவேயில்லை. மில்லர் 55 பந்துகளிலும், டுமினி 68 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். பின்னர், மளமளவென ஸ்கோர் உயர்ந்தது. மில்லர் 81 பந்துகளில் சதம் அடித்தார். டுமினி 96 பந்துகளில் சதம் அடித்தார். 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் விளாசிய மில்லர் 92 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜே.பி. டுமினி 100 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசினார். 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது.
நல்ல அடித்தளம்
ஜிம்பாப்வேயின் தொடக்க வீரர் சிக்கந்தர் ராசா 5 ரன்களில் வீழ்ந்தார். ஆனால், சிபாபா- மசகாட்ஸா ஜோடி அபாரமாக விளையாடியது. சிபாபா 63 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய மசகாட்ஸா 47 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிபாபா 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மசகாட்ஸா 74 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மறுமுனையில் டெய்லர் போராடிய போதும் மற்றவர்களின் உறுதுணை கிடைக்கவில்லை. டெய்லர் 40 பந்துகளில் 40 ரன் எடுத்து ஆட்டமிழன்தார். பின்வரி சையில் அதிகபட்சமாக மிர் 27 ரன் குவித்தார். ஜிம்பாப்வே 48.2 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளும் பிலாண்டர், மோனே மோர்கல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது மில்லருக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் மில்லர்-டுமினி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. இது 5-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட மிக அதிகபட்ச ரன் ஆகும்.