35-வது தேசிய விளையாட்டுப் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. இன்று முதல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனேவால், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, 35 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தூதர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.தொடக்க நிகழ்ச்சியின் போது விளையாட்டு வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஏற்றுக் கொண்டார். கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
கேரளத்தின் 7 மாவட்டங்களில் உள்ள பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.