விளையாட்டு

யுவராஜ் சிங் வீடு மீது கல்வீச்சு

செய்திப்பிரிவு

யுவராஜ் சிங் வீடு மீது அடையா ளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் யுவராஜ் சிங் மோசமாக பேட்டிங் செய்த தால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்தான் கல்வீச்சில் ஈடுபட் டுள்ளார்கள் என்று தெரிகிறது.

இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது போட்டியை நேரில் பார்த்த ரசிகர்கள் அனைவருமே யுவராஜ் சிங்கை கடுமையாக விமர்சித்தனர். அவர் மோசமாக விளையாடியதால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதுவே தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நிலையில் சண்டீகரில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் வந்த சிலர் வீட்டை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து யுவராஜ் வீட்டுக்கு காவல் அதிகரிக்கப் பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அப்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி சாதனை படைத்தார்.

ஆனால் இப்போதைய போட்டியில் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களில் மிகவும் தடுமாறிய யுவராஜ் அதிக ரன் குவிக்க முடியவில்லை. இறுதி ஆட்டத்திலும் அவர் ரன் எடுக்க முடியாமல் திணறினார். யுவராஜ் சிங் வீட்டின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்துக்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT