ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் வாவ்ரிங்கா பவுதிஸ்டா ஜோடி வெற்றி பெற்றுள்ளது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத் தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரட்டையர் பிரிவு போட்டியில் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா - ராபர்ட்டோ பவுதிஸ்டா அகட் ஜோடி, ஜோஹன் புரூன்ஸ்ட்ரோம் நிகோலஸ் மன்றோ ஜோடியை எதிர் கொண்டது. ரசிகர்கள் அனை வரும் வாவ்ரிங்கா ஜோடியே வெற்றிபெறவேண்டும் என்று விரும்பினார்கள். அதேபோல 5-7, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா பவுதிஸ்டா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. மேட்ச் டை பிரேக்கரின்போது ரசிகர்கள் அனைவரும் வாவ்ரிங்காவுக்குப் பலத்த ஆதரவு தெரிவித்தார்கள்.
ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தும் பலனில்லாமல் போனது. முதல் சுற்றில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள ஜப்பானின் தட்சுமா இடோவை எதிர்கொண்டார். தட்சுமா எளிதாக 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ராம்குமாரைத் தோற்கடித்தார்.
மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாந்த், செக் குடியரசை சேர்ந்த ஜிரி வெஸ்லேவுடன் மோதினார். வெஸ்லே, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் விஜய் சுந்தரைத் தோற்கடித்தார்.