புதுடெல்லி: 2026-ம் ஆண்டில் 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுடன் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் இந்த ஆண்டு முழுவதும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்டின் தொடக்கத்திலேயே ஜனவரி 9-ம் தேதி முதல் மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் (டபிள்யூபிஎல்) இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன் பின்னர் ஐசிசி சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை நாடுகளில் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, இம்முறை அதைத் தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கவுள்ளது. சொந்த நாட்டில் நடைபெறுவதால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் களத்தில் குதிக்கிறது.
இதன் பின்னர் ஜூன் 12-ம் தேதி முதல் ஐசிசி மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. 2025-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி இம்முறை, டி20 உலகக் கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது.
எனவே, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட், ஆடவர் ஐசிசி சர்வதேச டி20 உலகக் கோப்பை, மகளிர் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி என 3 உலகக் கோப்பை போட்டிகள் இந்த ஆண்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி மொத்தம் 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 29 சர்வதேச டி20 போட்டிகளிலும் (உலகக் கோப்பை தொடர் போட்டிகள் இதில் சேர்க்கப்படவில்லை), 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. எனவே, இந்த ஆண்டு முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மார்ச்சில் ஐபிஎல் போட்டி தொடக்கம்: இதற்கு இடையே 19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 26-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
நியூஸிலாந்து: ஐசிசி உலகக் கோப்பைக்கு முன்னதாக நியூஸிலாந்து, இந்திய அணிகள் மோதும் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் வரும் 11, 14, 18-ம் தேதிகளில் முறையே வதோதரா, ராஜ்கோட், இந்தூர் மைதானங்களில் நடைபெறவுள்ளது. இதன்பிறகு 5 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும், நியூஸிலாந்தும் விளையாடவுள்ளன. ஜனவரி 21(நாக்பூர்), ஜனவரி 23 (ராய்ப்பூர்), ஜனவரி 25 (குவாஹாட்டி), ஜனவரி 28 (விசாகப்பட்டினம்), ஜனவரி 31 (திருவனந்தபுரம்) ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இங்கிலாந்து: ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 சர்வதேச டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இலங்கை: இதன் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதைத் தொடர்ந்து செப்டம்பரில் வங்கதேசத்துக்குச் சுற்றுப்பணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 3 சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணியுடன் இந்திய அணி விளையாடும்.
ஆப்கானிஸ்தான்: செப்டம்பரில் ஆப்கானிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வருகை தருகிறது. அப்போது 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதவுள்ளது. வரும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நியூஸிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 5 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
டிசம்பர்: வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில், இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 3 சர்வதேச டி20 போட்டிகளில் மோதவுள்ளது.