மெக்சிகோ சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. போட்டியின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் பிரையன் குட்டிரெஸ் பந்துடன் முன்னேற முயன்றபோது தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்பெபெலோ சித்தோல், அவரை முரட்டுத்தனமாக ஃபவுல் செய்தார்.
இதன் காரணமாக சித்தோலுக்கு களநடுவர் நேரடியாக சிவப்பு அட்டை வழங்கினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 10 வீரர்களுடன் விளையாடியது. தொடர்ந்து 84-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் தெம்பா ஸ்வானே, மெக்சிகோ வீரர் ரொபர்ட்டோ ஆல்வராடோவின் முகத்தில் தாக்கினார்.
வீடியோ அசிஸ்டண்ட் ரெஃப்ரி (விஏஆர்) மூலமாக ஆய்வு செய்த நடுவர் தெம்பா ஸ்வானேக்கு சிவப்பு அட்டை வழங்கினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து காயங்களுக்கான இழப்பீடு நேரத்தில் 90+2-வது நிமிடத்தில்தென் ஆப்பிரிக்காவின் ஆபத்தான பதில் தாக்குதலைத் தடுப்பதற்காக, அந்த அணியின் வீரர் குலிசோ முதாவை மெக்சிகோ அணியின் தடுப்பாட்டக்காரர் சீசர் மான்டெஸ் ஃபவுல் செய்து கீழே தள்ளினார். இதனால் சீசர் மான்டெஸுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வரலாற்றில் முதல் போட்டியிலேயே 3 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற கத்தார் உலகக் கோப்பை முழுவதும் 4 சிவப்பு அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தற்போது முதல் ஆட்டத்திலேயே 3 சிவப்பு அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 2006-ம் ஆண்டு போர்ச்சுகல் - நெதர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் 4 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.தென் ஆப்பிரிக்க வீரர் தெம்பா ஸ்வானேக்கு சிவப்பு அட்டை காண்பித்த நடுவர் வில்டன் சம்பாயோ.