விளையாட்டு

மே.இ. தீவுகள் - தெ.ஆப்ரிக்கா 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

ஐஏஎன்எஸ்

தென்னாப்ரிக்கா- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நியூலேண்ட்டில் இன்று தொடங்குகிறது. தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா இப்போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இறங்குகிறது.

இப்போட்டியில் வென்றால், தொடரைச் சமன் செய்யலாம் என்பதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் கடும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த டிசம்பர் 17-ம் தேதி முதல் மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 220 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் ஆம்லா இரட்டைச் சதம் (208), டி வில்லியர்ஸ் (152), வான் ஸைல் (101) சதம் விளாச, 552 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா. பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களில் ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. பின் 131 ரன்களுக்குள் சுருண்டது.

போர்ட் எலிஸபெத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால், போட்டி டிரா ஆனது.

இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி இன்று நியூலேண்டில் தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணி நான்கு சிறப்பு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியும் பலன் ஏதுமில்லை. 2-வது டெஸ்டில் அந்த அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

3-வது டெஸ்டிலும் 5 பந்து வீச்சாளர்கள் தொடர்வார்களா என்பது குறித்து பயிற்சியாளர் ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் கூறும்போது, “அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார். கெய்ல், டேரன் பிராவோ ஆகிய வீரர்கள் இடம்பெறாதது இழப்பு என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

தென் ஆப்ரிக்கா தரப்பில், சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் அறிமுகப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

SCROLL FOR NEXT