கேப்டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்று கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் நம்பர் 1 நிலையைத் தக்க வைத்துள்ளது.
முதல் இன்னிங்சில் மே.இ.தீவுகள் 329 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா டிவிலியர்ஸின் 148 ரன்களுடன் 421 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் கடைசி 7 விக்கெட்டுகளை 33 ரன்களுக்குப் பறிகொடுத்து 215 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறத் தேவையான 124 ரன்களை 2 விக்கெட்டுகளை இழந்து எடுத்து வெற்றி கண்டது.
தொடக்க வீரர் டீன் எல்கர் 60 ரன்களையும் கேப்டன் ஹஷிம் ஆம்லா 38 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்கா 51/2 என்ற நிலையிலிருந்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் வெற்றியை ஈட்டியது.
இன்று மே.இ.தீவுகள் பவுலர்கள் கிடுக்கிப் பிடி போட்டனர். முதல் 44 பந்துகளுக்கு ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. பிறகு ஜெரோம் டெய்லர் பந்தில் எல்கர் ஒரு பவுண்டரி அடித்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, 3-வதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் டெஸ்ட் தரநிலையில் முதலிடத்தை தக்க வைத்தது.
ஆட்ட நாயகனாக டிவிலியர்சும், தொடர் நாயகனாக ஹஷிம் ஆம்லாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இரு அணிகளும் இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகளிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.