விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அசரென்கா அதிரடி தொடர்கிறது - தொடர்ந்து 3 போட்டிகளில் நேர் செட்களில் வெற்றி

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிரடியாக விளையாடி வரும் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா நேற்று தொடர்ந்து 3-வது போட்டியில் நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் தரவரிசையில் முன்பு முதலிடத்தில் இருந்த அவர் இப்போது 44-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் 16 முக்கிய டென்னிஸ் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் தரவரிசையில் பெரும் பின்னடைவை சந்திந்தார்.

இந்நிலையில் இப்போது மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அசரென்கா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி எதிர்த்து விளையாடும் வீராங்கனைகளை வீழ்த்தி வருகிறார்.

நேற்று தனது 3-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பார்பராவை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-வது சுற்றில் ஸ்லோவேகியாவின் டோமினிகா சிபுல்கோவைவை எதிர்கொள்ள இருக்கிறார். சிபுல் கோவா இப்போது மகளிர் டென் னிஸ் தரவரிசையில் 10-வது இடத் தில் உள்ளார். இந்த ஆட்டத்திலும் அசரென்கா வென்று காலிறுதிக்கு முன்னேறுவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஏனெனில் தவரிசையில் 8-வது இடத்தில் உள்ளவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகியை தனது 2-வது சுற்றில் அசரென்கா 6-4,6-2 என்ற நேர் செட்களில் வென்று அவருக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தார்.

முன்னதாக அசரென்கா தனது முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் இளம் வீராங்கனை ஸ்டீபென்ஸை 6-3,6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

நடனமாடி மகிழ்வித்த அசரென்கா

கரோலின் வோஸ்னியாகியை வெற்றி பெற்ற பிறகு மைதானத்திலேயே உற்சாகமாக நடனமாடி ரசிகர்களை அசரென்கா மகிழ்வித்தார். பின்னர் இது தொடர்பாக பேசிய அவர், நடனமாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் டி.வி.யில் டென்னிஸ் போட்டியை பார்க்கும்போது ரசிகர்கள் நடனமாடிக் கொண்டே போட்டயை ரசிப்பதை பார்த்திருக்கிறேன். அப்போது நானும் டி.வி. முன்பு நடனமாடுவேன். அது மனதுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் இப்போது ரசிகர்களை மகிழ்விக்க ஆடுகளத்தில் நடனமாடினேன் என்று கூறினார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 7 முறை பட்டம் பெற்றுள்ள அசரென்கா 2012, 2013-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து 4 சுற்றுகளில் நேர் செட்களில் வென்ற அசரென்கா காலிறுதியில் போலந்தின் அக்னிஸ்காவிடம் தோல்வியடைந்தார்.

4-வது சுற்றில் முன்னணி வீராங்கனைகள்

முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அக்னிஸ்கா, ஸ்பெயின் வீராங்கனை முகுரூசா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெட்ரா அதிர்ச்சி தோல்வி

தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் பெட்ரா விட்டோவா, 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மெடிசன் கீஸிடம் 4-6, 5-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT