விளையாட்டு

ஆஸி. கேப்டன் பெய்லிக்கு ஒரு போட்டியில் ஆடத் தடை, டேவிட் வார்னருக்கு அபராதம்

ஐஏஎன்எஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அணியின் வீரர் டேவிட் வார்னருக்கு, அவரது ஆட்டத் தொகையில் 50 சதவீதம் அபராதம் விதிகப்பட்டுள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், அந்த அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என ஆட்ட நடுவர்களால் புகார் எழுப்பப்பட்டது.

கடந்த ஒரு வருடத்தில், ஆஸ்திரேலிய அணி மீது இத்தகைய புகார் வருவது இது இரண்டாவது முறை என்பதால், விதிகளின் படி, அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், ஆட்டத் தொகையில் 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நடப்பு முத்தரப்புத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த ஒருநாள் போட்டியில் ஜார்ட் பெய்லி விளையாடமாட்டார்.

மேலும், அணியிலுள்ள மற்ற வீரர்களுக்கும், அவர்களது ஆட்டத் தொகையில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய வீரர் ரோஹித் சர்மாவுடன் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர்கள் வந்து சமரசம் செய்யும் வரை இது நீண்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

ஐசிசி விதிமுறைகளின் படி, ஆட்டத்தின் போக்குக்கு தடை ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு, அவரது ஆட்டத் தொகையிலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT