ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அந்த அணியின் கிளன் மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 95 ரன்கள் குவித்து சூப்பர் கிங்ஸிடமிருந்து வெற்றியைப் பறித்தார்.
அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
மெக்கல்லம் அதிரடி
முன்னதாக டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. டுவைன் ஸ்மித், பிரென்டன் மெக்கல்லம் சூப்பர் கிங்ஸுக்கு அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால் முதல் 5 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்தது சூப்பர் கிங்ஸ். அவானா வீசிய 5-வது ஓவரில் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய மெக்கல்லம், 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். சென்னை அணிக்காக விளையாடிய முதல் ஆட்டத்திலேயே அவர் அரைசதம் அடித்துள்ளார்.
இருவரும் தொடர்ந்து வேகம்
காட்ட 10-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது சூப்பர் கிங்ஸ். அந்த அணி 116 ரன்களை எட்டியபோது மெக்கல்லம் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
இதையடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அவருக்கு இது 100-வது ஐபிஎல் போட்டியாகும். ஐபிஎல்-லில் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றுள்ள ரெய்னா, ஐபிஎல்லில் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஸ்மித் அரைசதம்
100-வது ஆட்டத்தில் ரெய்னாவுக்கு அதிர்ஷ்டம் துணை இருந்தது. 4 ரன்கள் எடுத்திருந்த போது அவர் கொடுத்த கேட்சை பஞ்சாப் வீரர்கள் கோட்டை விட்டனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் கண்ட ஸ்மித், 43 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து தோனி களம் புகுந்தார். ரெய்னா 19 பந்துகளில் 24 ரன்களும், தோனி 11 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது சூப்பர் கிங்ஸ். ஜான்சன் 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கினார்.
பந்தாடிய மேக்ஸ்வெல்
இதையடுத்து 206 ரன்கள் என்ற வலுவான இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணியில் சேவாக் 10 பந்துகளில் 19, புஜாரா 10 பந்துகளில் 13, ஏர்.ஆர்.பட்டேல் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 5.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து கிளன் மேக்ஸ்வெல்லும், டேவிட் மில்லரும் ஜோடி சேர்ந்தனர். பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய மேக்ஸ்வெல், தொடர்ச்சியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
ஜடேஜா வீசிய 9-வது ஓவரில் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச்சை நெஹ்ரா கோட்டைவிட்டார். 37 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய மேக்ஸ்வெல், 25 பந்துகளில் அரைசதம் கண்டதோடு, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அதன் உச்சகட்டமாக பவன் நெஹி வீசிய 13-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார்.
77 ரன்களில் இருந்தபோது மீண்டுமொரு முறை பத்ரியால் வாழ்வு பெற்ற மேக்ஸ்வெல், ஸ்மித் வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தகையோடு ஸ்டெம்பை பறிகொடுத்தார். புயல் வேகத்தில் ரன் குவித்த அவர் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல்-மில்லர் ஜோடி 115 ரன்கள் குவித்தது.
மில்லர் அரைசதம்
மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த போதே ஆட்டம் பஞ்சாப் வசம் போயிருந்தது. மில்லருடன் இணைந்தார் கேப்டன் பெய்லி. இதன்பிறகு ஜடேஜா ஓவரில் இரு சிக்ஸர்களை விரட்டிய மில்லர் 32 பந்துகளில் அரைசதம் கண்டார். மோஹித் சர்மா ஓவரில் பெய்லி தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாச, 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பஞ்சாப். மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.