விளையாட்டு

சிட்னி டெஸ்ட்: ஆதிக்க ஆஸி. நாள் 1-ல் 348 ரன்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெடுகளை மட்டுமே இழந்து 348 ரன்களை எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்கள் ராஜர்ஸ் மற்றும் வார்னர் இருவரும் ஒருநாள் போட்டியைப் போலவே ரன் குவித்தனர். இந்திய பந்துவீச்சை இருவரும் சிதறடிக்க, பந்துவீச்சாளர்களை செய்வதறியாது நின்றனர்.

அதிரடியாக விளையாடிய வார்னர் 108 பந்துகளில் சதத்தை எட்டினார். ஆனால் 101 ரன்கள் எடுத்த்திருந்த நிலையில் அஸ்வினின் சுழலில் வார்னர் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே ராஜர்ஸும் 95 ரன்களுக்கு ஷமியின் வீச்சில் வெளியேறினார்.

இதற்கு பிறகு ஜோடி சேர்ந்த வாட்சன், ஸ்மித் ஜோடி ரன் குவித்தனர். இந்திய பந்துவீச்சு சொதப்பலாகவே இருக்க 67 பந்துகளில் ஸ்மித்தும், 99 பந்துகளில் வாட்சனும் அரை சதம் எட்டினர்.

நாள் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸி. அணி 348 ரன்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தது. வாட்சன் 61 ரன்களுடனும், ஸ்மித் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT