விளையாட்டு

சிட்னி முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா 572/7 டிக்ளேர்; இந்தியா நிதான துவக்கம்

செய்திப்பிரிவு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸி. தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து, 572 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. தொடந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை எடுத்துள்ளது.

நேற்று களத்தில் இருந்த வாட்சன் - ஸ்மித் ஜோடி, இன்றும் தொடர்ந்து இந்திய பவுலர்களை தண்டித்தது. ஸ்மித் 168 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இது இந்தத் தொடரில் அவரது நான்காவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்சன் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்மித் 117 ரன்களுக்கு வீழ்ந்தார். இந்த இணை பார்ட்னர்ஷிப்பில் 196 ரன்களைக் குவித்தது.

இவர்களின் வேலையை மார்ஷ், பர்ன்ஸ் இணை தொடர்ந்தது. மார்ஷ் 87 பந்துகளிலும், பர்ன்ஸ் 93 பந்துகளிலும் அரை சதம் கண்டனர். ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்து நடை போட்டது. மார்ஷ் 73 ரன்களுக்கு ஷமியின் வேகத்தில் வீழ்ந்தார். பர்ன்ஸும் ஷமியிடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரயான் ஹாரிஸும் அடுத்த ஓவரிலேயே 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை 572 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரன் ஏதும் எடுக்காமல் முரளி விஜய் 3-வது பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா, இளம் வீரர் ராகுலுடன் இணைந்து நிதனமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி ஸ்கோரை நகர்த்தினார். ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்தியா 501 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரோஹித் சர்மா 40 ரன்களுடனும், ராகுல் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆதிக்கம்

முன்னதாக நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில், காயம் காரணமாக மிட்செல் ஜான்சன் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பெற்றார். இந்திய அணியில் 4 மாற்றங்கள். தோனி, தவன், புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோருக்குப் பதிலாக சாஹா, ரெய்னா, ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றார்கள்.

அதிரடி ஆரம்பம்

ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும் கிறிஸ் ரோஜர்ஸும் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினார்கள். ஆஸ்திரேலியா 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு திருப்பம் ஏற்பட்டது. முகமது சமியின் பந்துவீச்சில் ரோஜர்ஸின் கேட்ச்சை ஸ்லிப்பில் தவறவிட்டார் கேஎல் ராகுல். கிடைத்த நல்ல வாய்ப்பையும் இழந்ததால் இந்திய அணி தொடர்ந்து சிரமத்துக்கு ஆளானது.

13 ஓவர்கள் ஆனபின்பும் விக்கெட் விழாததால் அஸ்வினை பந்துவீச அழைத்தார் கோலி. அஸ்வின் ஒருபக்கம் ரன்கள் கொடுக்காமல் பந்துவீசினாலும் மறுமுனையில் உமேஷ் யாதவ் தொடர்ந்து ரன்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். 45 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார் வார்னர். 20-வது ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்களை எட்டியது. விக்கெட் எடுக்கவும் முடியாமல் ரன்களைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் இந்திய பவுலர்கள் மிகவும் தடுமாறினார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமாராலும் நேற்று பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

வார்னர் 63-வது ரன் எடுத்தபோது, ரசிகர்கள் ஹியூஸின் நினைவாக பலமான வரவேற்பு கொடுத்தார்கள். வார்னரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆடுகளத்துக்கு முத்தம் கொடுத்தார். மறுமுனையில், 91 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஜர்ஸ். முதல் டெஸ்டில் சரியாக ஆடாதவர், அதன்பிறகு தொடர்ச்சியாக 5 அரை சதங்கள் எடுத்துள்ளார். உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா, 28 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 123 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு

ஆஸ்திரேலிய அணியின் ஓய்வறைக்கு அருகில் இருந்த ஹியூஸின் உருவம் பொறித்த பலகையைத் தொட்டு வணங்கிய பிறகு களத்துக்குள் நுழைந்தார் வார்னர். வழக்கம்போல தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். அப்போது அஸ்வினும் ரன்கள் கொடுக்க ஆரம்பித்ததால் கோலி செய்வதறியாமல் தவித்தார். ஒருநாள் ஆட்டம்போல வேகமாக ரன்களைக் குவித்த வார்னர், 42-வது ஓவரில் 108 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். பின்னர் ஒருவழியாக அஸ்வினின் 16-வது ஓவரில் விஜயிடம் கேட்ச் கொடுத்து 101 ரன்களில் (16 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.

சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரோஜர்ஸ், எதிர்பாராத விதமாக அடுத்த ஓவரிலேயே 95 ரன்களில் (13 பவுண்டரிகள்) சமியின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் திடீர் என இந்திய அணி சுறுசுறுப்பு அடைந்தது. முதல்நாள் முடிவில் எப்படியும் 5 விக்கெட்டுகளையாவது வீழ்த்திவிடலாம் என்று தீவிரமாக பந்துவீசியது. ஆனால் ஸ்மித்தும் வாட்சனும் திறமையாக ஆடி, இந்திய அணியின் திட்டத்தை செயல் இழக்கச் செய்தார்கள்.

பவுலர்கள் ஏமாற்றம்

இந்த டெஸ்ட் தொடரில் சுமாராக ஆடிவரும் ஷேன் வாட்சன் நேற்று மிகவும் பொறுப்பாக ஆடினார். ஸ்மித் வேகமாக ரன்கள் குவித்துக்கொண்டிருந்தபோது வாட்சன் நிதானமாக ஆடிவந்தார். தேநீர் இடைவேளையின்போது, ஆஸ்திரேலியா 60 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

அதன்பிறகு, மிகவும் சுறுசுறுப்பாக ஆடிய ஸ்மித் 67 பந்துகளில் அரை சதம் (8 பவுண்டரிகள்) எடுத்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு வாட்சனும் வேகமாக ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். அவர், 99 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் (5 பவுண்டரிகள்).

ஆஸி. 80 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து புதிய பந்தைத் தேர்வு செய்தது. ஆனால் அப்போதும் திருப்புமுனை எதுவும் ஏற்படவில்லை. ஸ்மித்தும் வாட்சனும் சுலபமாக ரன்களை எடுத்தார்கள். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் யாதவ் பந்துவீச்சில் வாட்சனின் கேட்ச்சை அஸ்வின் தவறவிட்டார்.

முதல் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா, 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 82, வாட்சன் 61 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு முறையும் தனது முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்துள்ளது (517/7, 505, 530). அதனால் இந்த டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்துவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்திய அணியில் கேப்டன் மாறியபின்பும் பவுலர்களிடம் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதிலும் உமேஷ் யாதவ் 16 ஓவர்கள் வீசி, 97 ரன்களை கொடுத்துள்ளார். அஸ்வினும் சமியும் ஓரளவு நன்றாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தி னாலும் ஆஸி. அணியின் ஆதிக்கத் தைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

SCROLL FOR NEXT