விளையாட்டு

ஜடேஜா தன் விக்கெட்டைத் தூக்கி எறிந்தார்: கங்குலி காட்டம்

இரா.முத்துக்குமார்

பெர்த்தில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜா பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது வர்ணனை செய்து கொண்டிருந்த கங்குலியின் கோபத்தைக் கிளப்பியது.

ஆட்டத்தின் 43-வது ஓவர் கடைசி பந்தில் தோனி, ஆண்டர்சன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். ஜடேஜா அதற்கு அடுத்த ஓவரிலேயே தனது விக்கெட்டைத் தூக்கி எறிந்தார்.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை எந்த வித இலக்குமில்லாமல் மேலேறி வந்து தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பிட்சில் இருந்த பவுன்ஸ் காரணமாக பந்து மட்டையில் சிக்காமல் ஃபின்னிடம் கேட்ச் ஆனது. 5 ரன்னில் ஜடேஜா வெளியேறினார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவைத் தந்தது.

அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த கங்குலி, "இப்படியொரு ஷாட்டை அவர் ஏன் ஆடினார் என்று அவரிடம் கேட்பது அவசியம். இன்னும் 7 ஓவர்கள் விளையாட வேண்டிய நிலையில் இப்படிப்பட்ட ஷாட்டை அவர் ஆட வேண்டிய அவசியம் என்ன?

இப்படிப்பட்ட போட்டிகளில் அவர் பொறுப்பாக ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக திகழ முடியும்.” என்ற கங்குலி அணி நிர்வாகம் அவர் ஆடிய அந்த ஷாட் தேர்வு குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.

ஹர்ஷா போக்ளே என்ற சக வர்ணனையாளர் அவரிடம் நீங்கள் கேப்டனாக இருந்தால் என்ன கூறியிருப்பீர்கள் என்று கேட்டதற்கு கங்குலி மேற்கண்டவாறு கூறினார்

SCROLL FOR NEXT