2015 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படும் நியூசிலாந்து அணியின் 15 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் போன்ற திறமை மிக்க வீரருக்கே அந்த அணியில் இடமில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆனால், ஆல்ரவுண்டர் கிராண்ட் எலியட் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2013, நவம்பரில் இவர் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடினார்.
ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள நியூசிலாந்து அணியில் கிராண்ட் எலியட் தவிர, டேனியல் வெட்டோரி, கோரி ஆண்டர்சன், நேதன் மெக்கல்லம் ஆகியோர் உள்ளனர்.
மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துகளை பேட்ஸ்மென்கள் மீது மோதவிடும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, 2014ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் இவருக்கும் இடமில்லை.
வேகப்பந்து வீச்சிற்கு டிரெண்ட் போல்ட், டிம் சவுதீ, மெக்ளீனகன், மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் ஆடம் மில்னா ஆகியோருடன் மதிப்புமிக்க அனுபவம் பெற்ற கைல் மில்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பேட்டிங்கில் அதிரடி வீரர்களான கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில், டாம் லாதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவுக்கு ஒரு காலக்கட்டத்தில் விளையாடிய லூக் ரோஞ்சி இடம்பெற்றுள்ளார்.
அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸான் அறிவித்த 15 வீரர்கள் கொண்ட நியூசி. அணி வருமாறு:
பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், கிராண்ட் எலியட், டாம் லாதம், மார்டின் கப்தில், மிட்செல் மெக்ளீனகன், நேதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னா, டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், டிம் சவுதீ, லூக் ரோஞ்சி, ராஸ் டெய்லர்.