சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சச்சின் வேடத்தில் சச்சின் டெண்டுல்கரே நடிக்கவுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 200 நாட்அவுட் என்கிற நிறுவனம், சச்சினின் விளம்பரங்களை நிர்வகிக்கும் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப்புடன் (டபிள்யூஎஸ்ஜி) இணைந்து சச்சினின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளது. லண்டனை சேர்ந்த ஜேம்ஸ் எர்ஸ்கின் படத்தை இயக்கவுள்ளார். 200 நாட்அவுட் நிறுவனம், 150-க்கும் அதிகமான விளம்பரப் படங்களை எடுத்துள்ளது.
சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை யைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பதால் படத்தில் அவருடைய சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சச்சின் வேடத்தில் சச்சின் நடிப்பதோடு படத்தில் அவர் பங்குபெற்ற கிரிக்கெட் போட்டிகளின் வீடியோக்களும் இடம்பெறும்.
இந்தப் படம், இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் 2000 திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.