டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய பிறகு 2 ஒருநாள் போட்டிகளிலும் 2 மற்றும் 1 ரன்னில் அவுட் ஆகி சொதப்பி வரும் ஷிகர் தவன் தன்னுடைய பார்முக்குத் திரும்புவதற்கான வழிமுறையை தோனி பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஷிகர் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை. துணைக்கண்டத்திற்கு வெளியே அடியெடுத்து வைத்தால் வீர்ர்கள் ரன்களைக் குவிக்க விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அது அவர்களை தளர்வடையச் செய்து விடுகிறது, அல்லது சோர்வடையச் செய்கிறது. தொடர்ந்து பேட்டிங்கில் தோல்வி கண்டு வரும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தங்களை வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டு பார்மை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.
இதனை ஆடம் கில்கிறிஸ்ட் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அவர் கொஞ்சம் பார்ம் இல்லாது போனால் கூட களத்திலிறங்கி அடித்து ஆடத் தொடங்குவார். ஆனால் சுத்தமாக பார்ம் இல்லை என்று அவர் உணர்ந்தால், முதல் பந்திலிருந்தே அவர் தாக்குதல் முறையில் ஷாட்களை ஆடத் தொடங்குவார். இந்த உத்தி எப்போதும் கைகொடுக்கும்.
இரண்டு நல்ல ஷாட்களை ஆடிய பிறகு உடனடியாக பார்ம் வந்து விடப்போகிறது. இந்த முறை ஷிகர் தவனுக்கு உதவிபுரியும் என்று நான் கருதுகிறேன்” என்றார்.
அதேபோல் 3ஆம் நிலையில் 5000 ரன்களுக்கு மேல் குவித்த விராட் கோலியை திடீரென 4ஆம் நிலையில் களமிறக்கும் உத்தி குறித்து தோனி கூறும்போது, “நடுக்கள பேட்டிங் வரிசையையும், கீழ்வரிசை பேட்டிங்கையும் நாம் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும் விராட் கோலி நின்று பிறகு அடித்து ஆட நேரம் கிடைக்கும். ஒரு முனையில் அவர் விக்கெட்டைக் காப்பாற்றுவாரேயானால், நாங்கள் அவருக்கு பின்னால் ஆதரவளிக்க வசதியாக இருக்கும்.” என்றார்.
தோனி கூறுவதில் பிரச்சினை உள்ளது, தொடக்கத்தில் விறுவிறுவென விக்கெட்டுகள் விழுந்தால் விராட் கோலி நின்று ஆடலாம் என்கிறார். ஆனால் அதில் விராட் கோலியும் ஒருவராக ஆகியிருக்கிறாரே என்பதுதானே தற்போதைய கேள்வி...