விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜடேஜா காயமடைந்துள்ளதால் யுவராஜுக்கு வாய்ப்பு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணியில் மற்றொரு ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சேர்க்கப்பட வாய்ப்பு அதிகரித் துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி நாளை மறுநாள் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் இந்த அணியே விளையாட இருக்கிறது.

தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் இப்போது வரை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. முழு உடல் தகுதி பெறாத நிலையில் அவரை உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்க தேர்வுக்குழு பரிசீலிக்க வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் யுவராஜ் சிங் இப்போது முழு உடல் தகுதியுடன் இருப் பதுடன் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே அவரது பெயர் உலகக் கோப்பை போட்டிக்கான அணிக்கு பரிசீலனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கோப்பையை வெல்ல யுவராஜ் சிங்கும் முக்கிய காரணமாக இருந்தார். அதன் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு மீண்டும் அணியில் இடம் பிடித்தாலும், அவரால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாமல்போனது. இப்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT