சிட்னி டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து மொத்தம் 348 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் அஸ்வினின் அரைசதம் மற்றும் புவனேஷ் குமாரின் 30 ரன்களுடன் 475 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய முன்னிலையை 97 ரன்களாகக் குறைத்தது.
ஆனால், இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியினர் தொடக்கத்தில் அஸ்வினிடம் அதிரடி வீரர் டேவிட் வார்னரை இழந்தாலும், ராஜர்ஸ் (56), வாட்சன் (16), ஸ்மித் (71), ஜோ பர்ன்ஸ் (66 - 39 பந்துகள் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்) பிராட் ஹேடின் (31 நாட் அவுட்) ஆகியோரது அதிரடி ஆட்டத்தினால் ஓவருக்கு 6.27 ரன்கள் என்ற விகிதத்தில் குவித்துத் தள்ளியது. 40 ஓவர்களில் 251 ரன்களை விளாசியது.
இந்திய அணியில் உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட உமேஷ் யாதவ் படு மோசமாக வீசினார். மந்தப் பிட்சில் ஷாட் பிட்ச், மற்றும் லெக் திசைப் பந்துகளை அதிகம் வீசி 3 ஓவர்களில் 45 ரன்களை வாரிவழங்கினார். இதில் 10 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் முதல் முறையாக ஆக்ரோஷமாக வீச 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் அவருக்கும் அடி விழுந்தது. 105 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார்.
புவனேஷ் குமார் 8 ஓவர்களில் 46 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷமி ஓரளவுக்கு சுமாராக வீசி முக்கியமான விக்கெட்டான ஸ்மித்தை வீழ்த்தினார். இவரும் 6 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்தார். ரெய்னா மட்டுமே சிக்கனமாக ஓவருக்கு 4.50 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
கேப்டன் ஸ்மித் 70 பந்துகளில் 71 ரன்களை எடுத்து இந்தத் தொடரில் 769 ரன்களை 128.16 என்ற சராசரியின் கீழ் குவித்துள்ளார்.
ஆனால் இன்றைய ஆட்டத்தின் நாயகன் ஜோ பர்ன்ஸ் என்றால் மிகையாகாது. டி20 பாணியில் அவர் ஆடினார். அஸ்வினை 3 சிக்சர்கள் விளாசினார். 33 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் அடுத்த 6 பந்துகளில் 66 ரன்களை எட்டினார். பிறகு உமேஷ் யாதவ்வை சேதப்படுத்தினார் பிராட் ஹேடின்.
அஸ்வினுக்கு பந்துகள் நன்றாகத் திரும்பின. நாளை இந்திய அணியை காலையில் களமிறக்க ஸ்மித் முடிவெடுத்தால் நேதன் லயன் ஒரு சக்தியாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இன்று தொடக்கத்திலேயே அஸ்வின் புதிய பந்தை பகிர்ந்து கொண்டார். அத்தகைய ஒரு முடிவை ஸ்மித்தும் முயற்சித்தால் தொடக்கம் முதலே இந்தியாவுக்கு நெருக்கடிதான்.
ஆனால், டிரா செய்வதை விட வெற்றிக்கு ஆடுவதே நல்லது. டெஸ்ட் தொடரில் 0-2 என்ற தோல்விக்கும் 0-3 என்ற தோல்விக்கும் பெரிய வித்தியாசமில்லை.