விளையாட்டு

உலகக்கோப்பையில் கவனிக்க வேண்டிய 10 வீரர்கள்: ஜெஃப் லாசன் பட்டியல்

இரா.முத்துக்குமார்

வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தங்களது ஆட்டத்தினால் கவரக்கூடிய 10 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் வெளியிட்டுள்ள 10 வீரர்கள் விவரம் வருமாறு:

1. மிட்சில் ஸ்டார்க்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பந்துவீச்சு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டுகளில் அவர் ஒரு அச்சுறுத்தலான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது யார்க்கர்களும் பவுன்சர்களும் சிலபல விக்கெட்டுகளை அவருக்குப் பெற்றுத்தரும். முடிவு ஓவர்களில் அவரது இன்ஸ்விங்கிங் யார்க்கர்களை விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அன்று இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிட்னியில் இதனை அவர் நிரூபித்தார். உலகக் கோப்பையிலும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

2. டேவிட் வார்னர்:

ஸ்டார்க் எப்படி பந்துவீச்சில் எதிரணியினரை முறியடிப்பாரோ அப்படித்தான் பேட்டிங்கில் டேவிட் வார்னர். ஒருநாள் போட்டிகளில் இவரது ஆட்டம் அதிகம் சோபிக்கவில்லை என்றாலும் தன் சொந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டிகளில் இவர் அபாயகரமான வீரராகத் திகழ்வார். இவரை முடக்க தொடக்க ஓவரிலேயே ஸ்பின்னைக் கொண்டுவர அணிகள் முயற்சி செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3. மொயீன் அலி (இங்கிலாந்து):

தொடக்கத்தில் களமிறங்குவதோடு ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் 10 ஓவர்களை வீச முடியக்கூடியவர். புதிய பந்தில் பயப்படாமல் அடித்து ஆடுகிறார். பந்தை தூக்கி அடிக்கவும் அஞ்சுவதில்லை. அவர் ஸ்பின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்கிறார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார். அவரை சிலபல ஷாட் பிட்ச் பந்துகளை வீசி அவுட் செய்ய அணிகள் தங்கள் ஹோம்வொர்க்கை தொடங்கி விட்டன. ஆஸ்திரேலிய பிட்ச்களின் பவுன்ஸிற்கு மொயீன் அலி புதிது. ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஆல்ரவுண்டர் மொயீன் அலி.

4. ஏ.பி.டீவிலியர்ஸ்:

எந்த ஒரு ஆட்டக்களமாக இருந்தாலும் அதில் எந்தவிதமான பந்து வீச்சாக இருந்தாலும் ஏ.பி.டீவிலியர்ஸ் ரன்களைக் குவிப்பார். ஏ.பி.டீவிலியர்ஸ் கிரீஸில் இருக்கும் வரையில் தென் ஆப்பிரிக்கா தோற்க வாய்ப்பில்லை.

5. பிரெண்டன் மெக்கல்லம்

சிறந்த வேகப்பந்து வீச்சைக்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லமின் பேட்டிங் மிக முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது. 2014-ஆம் ஆண்டில் அவரது டெஸ்ட் அதிரடி ஆட்டங்கள் 2015 ஒருநாள் போட்டிகளுக்கு மாறியுள்ளது. உலகில் எந்த ஒரு பந்து வீச்சும் அவரது தாக்குதல் ஆட்டத்தை முடக்க திராணியற்றதாக இருக்கிறது. மேலும் உள்நாட்டிலேயே விளையாடுவதால் மெக்கல்லம் தனது ஆட்டத்தின் மூலம் தன் அணியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

6. ஷாகித் அப்ரீடி (பாகிஸ்தான்)

என்றும் புத்துணர்வுடன் இருக்கும் பூம்... பூம் அஃப்ரீடி ஆடிக்கொண்டேயிருக்கிறார். நான் அவரது வயதைக் குறிப்பிட விரும்பவில்லை. காரணம் அவர் பிறந்த தேதி பற்றி 4 வேறுவேறு குறிப்புகள் உள்ளன. ஆனால் ஊடுருவும் அவரது பந்து வீச்சிற்கும், அதிரடி ஆட்டத்திற்கும் வயது தடையல்ல. அவர் தனது லெக் பிரேக் மற்றும் ஸ்லைடர்கள் மூலம் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். இது அவரது கடைசி உலகக் கோப்பை, ஒருநாள் தொடர் எல்லாம்.. அவருக்கு இது ஒரு பெரிய உலகக்கோப்பை.

7. குமார் சங்கக்காரா

சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக எழுச்சியுற்ற ஒரு மூத்த வீரர் சங்கக்காரா. அவரது சக வீரர் மகேலா ஜெயவர்தனே போல் இவருக்கும் ஆட்டங்களை எப்படி வெல்வது என்பது தெரியும். விக்கெட் கீப்பராகவும் அவருக்கு நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன. போட்டிகளை வெல்லவும் ரன்களைக் குவிக்கவும் அவருக்கு தீராத தாகம் உள்ளது. இவர் தோல்வியடைவது அரிது. துணைக் கண்டத்தின் பேட்டிங் சொர்க்கத்தை விடுத்து மற்ற நாடுகளிலும் அவர் சிறப்பாக ஆடியிருப்பதை அவரது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு இது நல்ல உலகக் கோப்பையாக அமைந்தால் அவரது அணிக்கும் சிறப்பாகவே அமையும்.

8.கிறிஸ் கெய்ல்

சொல்லவேத் தேவையில்லை மேற்கிந்திய தீவுகள் அணி என்ற சக்கரத்தில் உராய்தலைத் தடுத்து சக்கரம் தங்குதடையின்றி ஓடவைப்பவர் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட் அதிரடி ஆட்டத்தை ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அவர் மாற்றிவிட்டால் மே.இ.தீவுகள் ரன்களைக் குவிக்கும், பிறகு வெற்றி சுலபமாகும். மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு வர முடியாவிட்டாலும் கெய்லின் ஆட்டம் இந்த உலகக் கோப்பையில் ஒரு பெரிய பொழுதுபோக்கு அமசம்தான்.

9. ரவீந்திர ஜடேஜா

முழுதும் ரன்களாக இருக்கும் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பின்கள ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரவி அஸ்வினுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவின் தற்போதைய உண்மையான ஆல்ரவுண்டர் இவர்தான். பீல்டிங்கில் சிறந்தவர். பவர் பிளேயில் வீசக்கூடியவர். அவரது பீல்டிங்கே இந்திய அணிக்கு சில விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்து அதன் மூலம் ஆட்டம் திரும்பியுள்ளது.

10. ஜாவேத் அஹ்மதி (ஆப்கானிஸ்தான்):

துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஜாவேத் நிறைய ரன்களைக் குவித்தார். நான் முதன் முதலில் 2011 அண்டர்-19 உலகக் கோப்பையின் போது இவரைப் பார்த்தேன். துணைக்கண்ட வீரர்கள் பலரிடம் இல்லாத ஒன்று இவரிடம் உள்ளது. அதாவது வேகமான, ஷாட் பிட்ச் பந்துகளை இவர் அனாயசமாக ஆட முடிவதை நான் பார்த்திருக்கிறேன். ஆப்கான் அணியை சாதாரணமாக எடைபோடவேண்டாம். அந்த அணி சிலபல அதிர்ச்சிகளை கொடுத்தால் அதில் ஜாவ்”ஏத் அஹ்மதி ஒரு முக்கியப் பங்கு வகிப்பார் என்றே நான் கருதுகிறேன்.

SCROLL FOR NEXT