விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அனா இவானோவிச் அதிர்ச்சி தோல்வி, இந்தியாவின் யூகி பாம்ப்ரி வெளியேற்றம்

ராய்ட்டர்ஸ்

மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்தியா சார்பில் இப்போட்டியில் களமிறங்கிய யூகி பாம்ப்ரியின் சவாலும் முதல் சுற்றிலேயே முடிவுக்கு வந்தது.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

அனாவுக்கு அதிர்ச்சி

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அனா இவானோவிச், தரவரிசையில் 142 வது இடத்தில் உள்ள செக் குடியரசின் லூசி ஹராடிகாவை அனா எதிர்கொண்டார். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார் அனா. ஆனால் அடுத்த செட்டில் நிலைமை மாறியது. அனாவுக்கு எதிராக கடுமையாக போராடிய லூசி 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.

இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இதில் 6-2 என்ற கணக்கில் வென்ற லூசி, அனாவை போட்டியில் இருந்து வெளியேற்றினார். லூசி தகுதிச் சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் 10 முறை டபுள் பால்ட்களை அனா செய்தார். எளிதாக தவிர்க்க வேண்டிய தவறுகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நடால், பெடரர் வெற்றி

முதல் சுற்றில் முன்னணி வீரர்களான ஸ்பெயின் ரபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்திய வீரர் தோல்வி

தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரேவை, 317-வது இடத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி எதிர்கொண்டார். 6-3, 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் முர்ரே வெற்றி பெற்று பாம்ப்ரியை போட்டியில் இருந்து வெளியேற்றினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் இருந்து யூகி பாம்ப்ரி மட்டுமே தகுதி பெற்றார். அவர் தோல்வியடைந்ததன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT