ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா தோல்வியடைந்து வெளியேறினார். தொடர்ந்து நேர் செட்களில் சிறப்பான வெற்றியை பெற்று வந்த அசரென்கா, ஸ்லோவேகியா வீராங்கனை டோமினாகா சிபுல்கோவாவிடம் அவர் தோல்வியடைந்தார்.
சிபுல்கோவா அடுத்து காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்ள இருக்கிறார்.
தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவரான சிபுல்கோவை, கடந்த முறை இறுதி ஆட்டம் வரை முன்னேறினார். தரவரிசையில் முன்பு முதலிடத்தில் இருந்த அசரென்கா 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடாததால் அவர் தரவரிசையில் 44-வது இடத்துக்கு பின்தங்கினார். இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் அவர் நேர் செட்களில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் முதல் செட்டில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட சிபுல்கோவா 6-2 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி அசரென்காவுக்கு சவால் அளித்தார். இந்த போட்டித் தொடரில் அசரென்கா இழந்த முதல் செட் இதுதான்.
எனினும் அடுத்த செட்டை சுதாரித்து விளையாடிய அசரென்கா 6-3 என்ற கணக்கில் அதனை கைப்பற்றினார். இதையடுத்து 3-வது செட்டில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இருவரும் கடுமையாக போராடினர். எனினும் இறுதியில் சிபுல்கோவாவின் கையே ஓங்கிய அவர் 6-3 என்ற கணக்கில் 3-வது செட்டை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் செரீனா
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் செரீனா இழந்தார். எனினும் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்து சிபுல்கோவாவை எதிர்கொள்ள இருக்கிறார்.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மேடிசன் கீஸையும், ஜெர்மனியின் மகரோவா, ருமேனியாவின் சிமோனா ஹெலப்பையும், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, கனடா வீராங்கனை போச்சார்டையும் எதிர்கொள்ள இருக்கின்றனர்.
ஆடவர் பிரிவு
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சையும், ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் நிக் கைரோஜிஸையும், ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷி கோரியையும் எதிர்த்து விளையாடுகின்றனர். கனடாவின் ரயோனிக் காலிறுதிக்கு முன்னேறிவிட்டார். அவரை எதிர்த்து ஜோகோவிச் விளையாடுகிறார்.
காலிறுதியில் சானியா ஜோடி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதியில் விளையாட இந்தியாவின் சானியா மிர்ஸா, பிரேசிலின் புரூனோ சோரஸ் இணை தகுதி பெற்றுள்ளது.