விராட் கோலியை 3ஆம் நிலையை விடுத்து, 4ஆம் நிலையில் களமிறக்குவது பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விவ் ரிச்சர்ட்ஸ் அந்த உத்தியை ஆதரித்துள்ளார்.
இது பற்றி அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது:
"எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மெனுக்கும் 4-ஆம் நிலை ஒரு சிறந்த பேட்டிங் நிலையே. பவுன்ஸ் சற்று கூடுதலாக இருக்கும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் சில பேட்ஸ்மென்கள், குறிப்பாக முதல் 3 நிலையில் களமிறங்குபவர்கள் சோபிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.
அதனால் விராட் கோலியை 4-ஆம் நிலையில் இறக்குவதில் அர்த்தமிருப்பதாகவே கருதுகிறேன். அந்த நிலையில் அவர் எதிரணியினர் பந்துவீச்சு, களவீயூகத்தினை ஆதிக்கம் செலுத்த முடியும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பிட்ச்களில் விரைவில் விக்கெட்டுகள் சரியும். இதனால் 3-ஆம் நிலையில் அவர் களமிறங்கினால் விரைவில் அவுட் ஆக வாய்ப்புள்ளது. அவரது பலவீனங்கள் வெளிப்படலாம்.
4ஆம் நிலையில் இறங்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தனது இன்னிங்ஸை சரியான பாதையில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. முதலில் பேட் செய்தாலும், இலக்கைத் துரத்தினாலும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து அதற்கேற்ப தன் ஆட்டத்தை அமைத்துக்கொள்ள 4ஆம் நிலை சிறந்தது.
அணியின் சிறந்த பேட்ஸ்மென் 3ஆம் நிலையில் களமிறங்குவதே சிறந்தது என்று கூறுபவர்கள் இருக்கின்றனர். ஆனால், இவற்றையெல்லம் வெளியில் இருந்து கொண்டு கருத்து கூறுவது கடினம், அணியின் சூழ்நிலை என்னவென்று நமக்கு தெரியாது, சிலபல காரணிகள் இருக்கலாம்.” என்றார்.