விளையாட்டு

பிசிசிஐ தேர்தலை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு முடிவடையாததால் பிசிசிஐ தேர்தலை ஜனவரி இறுதி வரை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையில், முதன்முறையாக சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆஜரானார். அப்போது அவருக்கு தன் நிலையை விளக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், தான் எந்த ஒரு கருத்தையும் கூற விரும்பவில்லை என்றும், அவ்வாறு கூறினால் அது சூதாட்டம் தொடர்பான வேறு ஒரு வழக்கில் தனக்குச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் தன் நிலையை விளக்கினார்.

அப்போது நீதிபதிகள், "நீங்கள் அணி உறுப்பினரா இல்லையா என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எனினும், முத்கல் அறிக்கையில் நீங்கள் அணியின் உறுப்பினர்தான் என்று கூறப்பட்டுள்ளது" என்றனர்.

பின்னர் "இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடிவடையாததால் நாங்கள் ஒரு முடிவுக்கு வர சில காலம் ஆகும்" என்று நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.

பிசிசிஐ தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இத்துடன் மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே செப்டம்பர் 26-ம் தேதியில் இருந்து நவம்பர் 20-ம் தேதிக்கு ஒரு முறையும், பின்னர் டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒரு முறையும், தற்போது ஜனவரி 31, 2015ம் தேதிக்கு ஒரு முறையும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT