மும்பையில் நடைபெற்ற தியோதர் கோப்பை ஒருநாள் போட்டி அரையிறுதியில் தெற்கு மண்டல அணியை மேற்கு மண்டலம் வீழ்த்தி இறிதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் மனோஜ் திவாரி தலைமை கிழக்கு மண்டல அணியை மேற்கு மண்டலம் சந்திக்கிறது.
டாஸ் வென்ற மேற்கு மண்டலம் முதலில் வினய் குமார் தலைமை தெற்கு மண்டல அணியை பேட் செய்ய அழைக்க அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மேற்கு மண்டலம் 47.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுதுது அபார வெற்றி பெற்றது.
இலக்கைத் துரத்தும் போது முதலில் மேற்கு மண்டல வீரர்கள் ஜேக்சன், அம்பாத்தி ராயுடு ஆகியோர் விரைவு அரைசதம் கண்டனர். ஆனால் தொடர்ந்து விக்கெடுகள் சரிய 32.5 ஓவர்களில் மேற்கு மண்டலம் 174/6 என்று தோல்வி முகம் கண்டது. அப்போதுதான் ஐபிஎல் புகழ் சூர்யகுமார் யாதவ், இந்திய ஒருநாள் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் இணைந்தனர்.
6 ஓவர்களில் இருவரும் 70 ரன்களை விளாசினர். சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து அப்போது ஆட்டமிழந்தார். ஆனால் மேற்கு மண்டலம் 38.5 ஓவர்களில் 244 ரன்களை எட்டி நிலைபெற்றது. 41-வது ஓவர் முடிவில் தவல் குல்கர்னி ஆட்டமிழக்க 269/8 என்று ஆனது.
ஆனால் அக்சர் படேல் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். மேற்கு மண்டல அணியில் யூசுப் பத்தான் சோபிக்கவில்லை.
இவரும், எஸ்.என்.தாக்கூரும் இணைந்து 6 ஓவர்களில் மேலும் 50 ரன்கள் சேர்க்க மேற்கு மண்டலம் வெற்றியை ஈட்டியது. தாக்கூர் 23 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். அபிமன்யு மிதுன் இந்த தொடரில் தனது பயங்கர யார்க்கர்களைக் கண்டுபிடித்துக் கொண்டுள்ளார். ஆனால் அவர் 7 ஓவர்களையே வீசினார் இதில் 38 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். அவரது முழு ஓவர்களும் ஏன் முடிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.
சூர்யகுமார் யாதவ்வுக்கு 9 மற்றும் 11 ரன்களில் இரண்டு வாய்ப்புகள் கோட்டை விடப்பட்டன. இதனையடுத்து அபிமன்யு மிதுன் பவுன்சரை ஹூக் மூலம் சிக்ஸ் அடித்து அதிரடியைத் தொடங்கினார் சூர்ய குமார். அதன் பிறகு அவரை நிறுத்த முடியவில்லை. ஸ்டூவர்ட் பின்னி, வினய் குமார் சில சீப்பான புல்டாஸ்களை வீசினர்.
முன்னதாக தெற்கு மண்டல அணியில் உத்தப்பா 47 ரன்களையும், மயங்க் அகர்வால் அதிரடி 86 ரன்களையும், தமிழக வீரர் பாபா அபராஜித் 56 ரன்களையும், மணீஷ் பாண்டே 55 ரன்களையும் விளாசினர்.