விளையாட்டு

இந்திய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா உள்ளிட்டோருக்கு கடும் சவால்

செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெறும் 4-வது இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் லீ ஸியூரூய் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் 8-வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் நடப்பு சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனன் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிவிட்டார்.

இந்தப் போட்டியின் டிராவைப் பொறுத்தவரையில் சாய்னா நெவால் காலிறுதி வரை எவ்வித சிக்கலும் இன்றி முன்னேறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் காலிறுதியில் அவருக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அதில் சாய்னா, முன்னாள் உலக சாம்பியனும், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான சீனாவின் இகன் வாங்கை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சாய்னாவும், இகன் வாங்கும் 8 முறை மோதியுள்ளனர். அதில் ஒருமுறை மட்டுமே சாய்னா வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து இந்திய ஓபனில் இதுவரை சிறப்பாகவே விளையாடி வந்திருக்கிறார். கடந்த இரு இந்திய ஓபன்களில் முறையே காலிறுதி மற்றும் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார்.

அவருக்கு முதல் சுற்றே கடினமானதாக அமைந்துள்ளது. இன்று நடைபெறும் முதல் சுற்றில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டனில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சீனாவின் ஷிக்ஸியான் வாங்கை சந்திக்கிறார் சிந்து. எனினும் ஷிக்ஸியானுடன் மோதிய 3 முறையுமே சிந்து வெற்றி பெற்றுள்ளார். அதனால் இந்த முறை அவர் மிகுந்த நம்பிக்கையோடு ஷிக்ஸியானை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி நேற்று தொடங்கியது. 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தகுதிச்சுற்றுகள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT