விளையாட்டு

ஆஸி.க்கு எதிராக 3 சதங்கள் எடுத்த விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் 15-வது இடம்

பிடிஐ

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தற்போதைய தரவரிசையில் பேட்டிங்கில் இந்திய பேட்ஸ்மென்களில் கோலி ஒருவரே இத்தகைய இடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கோலி 169 மற்றும் 54 ரன்களை எடுத்ததால் 737 தரநிலைப்புள்ளிகளுடன் 19-வது இடத்திலிருந்து 15-வது இடத்திற்குத் தாவியுள்ளார்.

புஜாரா 19-வது இடத்திலும் வேறு ஒரு தளத்திற்கு முன்னேறிய முரளி விஜய் 20-வது இடத்திலும் உள்ளனர்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 147 மற்றும் 48 ரன்களை எடுத்த அஜிங்கிய ரஹானே, 15 இடங்கள் முன்னேறி 26-வது இடத்திற்கு முன்னேறினார்.

மாறாக, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதன் முறையாக பேட்டிங் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறினார். தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்யர்ஸ் மற்றும் சங்கக்காரா ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், மொகமது ஷமி ஆகியோர் 8 இடங்கள் முன்னேறி, முறையே 36, மற்றும் 38வது இடங்களில் உள்ளனர். முதலிடம் தொடர்ந்து டேல் ஸ்டெய்னுக்கே.

ஆஸ்திரேலியாவின் ரயான் ஹேரிஸ் 2 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தில் உள்ளார். நியூசி. அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 7-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மாற்றங்கள் இல்லை. வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்திலும், வெர்னன் பிலாண்டர் 2ஆம் இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி இன்னும் ஒரு டிரா செய்தால் போதும் அந்த அணி நம்பர் 1 டெஸ்ட் அணிக்கான ரிலையன்ஸ் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் பெறும். பரிசுத்தொகை: 500,000 அமெரிக்க டாலர்கள்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அடுத்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றால் தென் ஆப்பிரிக்காவை விட 0.2 புள்ளிகள் அதிகம் பெற்று ஆஸ்திரேலியா டெஸ்ட் தரநிலையில் முதலிடம் பெற்று விடும்.

3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உள்ளன.

SCROLL FOR NEXT