ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு போட்டியில் முன்னணி வீரர்கள் பங்கேற்பதால் அந்தப் போட்டி, ஒற்றையர் பிரிவு போட்டியைவிட அதிக சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், ஒற்றையர் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கும் 3 வீரர்கள், இரட்டையர் பிரிவில் விளையாடி வரும் முன்னணி வீரர்களான ராபர்ட்டோ பவுதிஸ்டா அகட், பெலிஸியானோ லோபஸ் மேக்ஸ் மிர்ன்யி, இவான் டோடிக், ராபின் ஹேஸி உள்ளிட்டோர் இரட்டையர் பிரிவு போட்டியில் களமிறங்குகிறார்கள்.
இரட்டையர் பிரிவில் தற்போது வரை 12 ஜோடிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 4 ஜோடிகள் வரும் ஜனவரி 3-ம் தேதி இறுதி செய்யப்படவுள்ளன.
சர்வதேச தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸ், 47-வது இடத்தில் இருக்கும் பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யிவுடன் ஜோடி சேர்கிறார். மிர்ன்யி 48 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் பவுதிஸ்டாவுடன் இணைந்து ஆடுகிறார்.
குரேஷியாவின் இவான் டோடிக், சகநாட்டவரான மேட் பேவிச்சுடனும், ஜெர்மனியின் ஆண்ட்ரே பெஜிமான், நெதர்லாந்தின் ராபின் ஹேஸியுடனும், கடந்த சென்னை ஓபனில் ஃபிரெட்ரிக் நீல்சனுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வீடனின் ஜோஹன் புரூன்ஸ்ட்ரோம், இந்த முறை நிகோலஸ் மன்றோவுடனும் இணைந்து களமிறங்குகின்றனர்.