விளையாட்டு

பிரிஸ்பன் டெஸ்ட் : 4-ஆம் நாள் ஆட்டத்திற்கு தாமதமாக வந்த இந்திய வீரர்கள்

செய்திப்பிரிவு

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்திற்கு இந்திய வீரர்கள் சிலர் தாமதமாக மைதானத்திற்கு வந்ததாக ஆஸி.ஊடகம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் இந்திய பேட்ஸ்மென்கள் சரிவடைந்த அந்த 4-ஆம் நாள் இந்திய வீரர்கள் மைதானத்திற்கு தாமதமாக வந்ததாக இந்திய அணி நிர்வாகிகள் உறுதி செய்துள்ளதாக ஆஸி. ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

விக்கெட்டுகள் மடமடவென்று சரியும் போது கூட பின்கள வீரர்கள் மைதானத்திற்கு குறித்த நேரத்தில் வரவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. குறிப்பாக இசாந்த் சர்மா, வருண் ஆரோன் அந்த தாமதப் பட்டியலில் இருந்ததாகவும் ஆனால் இந்திய அணி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இன்னிங்ஸை தொடர வேண்டிய ஷிகர் தவன் வலைப்பயிற்சியில் மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் களமிறங்க மறுத்துள்ளார். அதன் பிறகே போதிய அவகாசம் இல்லாமல் விராட் கோலி களமிறக்கப்பட்டார்.

பிறகு களமிறங்கிய ஷிகர் தவன் 81 ரன்களை அனாயசமாக எடுத்தார். தோனியும் அன்றைய தின தோல்விக்குப் பிறகு தவன் காயத்தினால் ஓய்வறையில் சலசலப்பு ஏற்பட்டது என்றும், இதனை கொஞ்சம் முறையாகக் கையாண்டிருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த போது கூட இந்திய பின்கள வீரர்கள் மைதானத்திற்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தாமத வீரர்கள் பட்டியலில் வருண் ஆரோன், இசாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது.

ஆட்டத்தின் மிக முக்கியமான 4-ஆம் நாள் ஆட்டம் இந்திய விதியைத் தீர்மானிக்கும் தினம், ஆனால் அன்றைய தினம் வீரர்கள் மைதானத்திற்கு தாமதமாக வந்துள்ளது தற்போது இன்னொரு சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT