நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் நடுவர்களின் தீர்ப்பில் சீரற்ற தன்மை இருப்பதாக தோனி கூறியிருந்தார், அதனை சூசகமாக மறுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன்.
2 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 5 தீர்ப்புகளினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய கேப்டன் தோனி நடுவர்களின் தரம் உயர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கூறிய நேதன் லயன், நடுவர் தீர்ப்புகளை முன்வைத்து வீரர்கள் உணர்ச்சிவசப்படுதல் கூடாது என்றார், “நாம் உணர்ச்சிகளை களத்தில் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஓரிரு தீர்ப்புகள் இருதரப்பினருக்கும் சாதகமாக இல்லை என்பதால் கொஞ்சம் பதட்டம் நிலவியது. ஆனால் அதுதான் டெஸ்ட் கிரிக்கெட். களத்தில் நிறைய உணர்ச்சிகர வெளிப்பாடுகள் நிகழ்ந்தன. நாம் பொறுமையாக இருந்து நமது வழியில் கவனம் செலுத்த வேண்டும், நடுவர் தீர்ப்புகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில் பயனில்லை.
நடுவரக்ள் ஓரளவுக்கு நன்றாகவே செயலாற்றுவதாகவே நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நடுவர்களுக்குமே பதட்டம் இருந்தது.
அடிலெய்ட் போட்டியில் டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் முடிவுகள் வேறுமாதிரி அமைந்திருக்கும். மேலும் எங்களுக்கு சாதகமாகக் கூட டி.ஆர்.எஸ் அமைந்திருக்கும். டி.ஆர்.எஸ். முறை அவசியமானது, இரு அணிகளுக்குமே அது நல்லதுதான்”என்றார் லயன்.