விளையாட்டு

சொர்க்கங்கள் கீழே விழுந்து விடாது: பிசிசிஐ மீது உச்ச நீதிமன்றம் கடும் விமர்சனம்

பிடிஐ

ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் உட்பட பல்வேறு வணிக நலன்கள் உடைய பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் அல்லது சாம்பியன்ஸ் லீக் அணிகளின் உரிமையாளராக இருப்பதோடு பிசிசிஐ நிர்வாகத்திலும் ஒரு பதவி வகிக்கும் முரண்பட்ட இரட்டை நிலையை உருவாக்க பிசிசிஐ செய்த சர்ச்சைக்குரிய புதிய திருத்தங்களை ஆதரித்து பிசிசிஐ இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதங்களைத் தொடர்ந்த போது, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் கலிஃபுல்லா ஆகியோர், “பிசிசிஐ அதிகாரிகள் அணிகளின் உரிமையாளராக இல்லாது போனால் சொர்க்கங்கள் கீழே விழுந்து விடாது” என்றனர்.

"பிசிசிஐ தலைவர் அணி ஒன்றை நடத்தாமல் இருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டே அஸ்தமித்து விடாது. இத்தகைய நலன்கள் இல்லாவிட்டால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது போய் விடுமா என்ன, மேலும் வர்த்தக நலன்கள் கொண்ட ஒருவர் அணி ஒன்றையும் நடத்தலாம் என்பதை நம்பி ஐபிஎல் கிரிக்கெட் இல்லை.

ஆகவே, வணிக மற்றும் பிற நலன்கள் உள்ள பிசிசிஐ நிர்வாகிகள் பட்டியலை எங்களுக்கு கொடுங்கள். அப்படிப்பட்ட யார் யாருடன் எத்தகைய ஒப்பந்தங்களைச் செய்துள்ளீர்கள், மற்றும் என்ன மாதிரியான ஒப்பந்தங்கள் அவை என்பது எங்களுக்குத் தெரிந்தால் நல்லது.

அப்படி வணிக நலன்கள் இருக்கிறது என்று தெரியவந்தால் எந்தெந்த நிர்வாகிகள் பாதிக்கப்படுவார்கள்” என்று நீதிபதிகள் மீண்டும் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.

’திருத்தங்கள் செய்யப்படாத விதிமுறைகள் இருந்தால் அணியை நடத்த முன்வருபவர்கள் தயங்குவார்கள்’ என்று பிசிசிஐ வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் தெரிவித்ததையடுத்து திருப்தி அடையாத நீதிபதிகள் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளனர்.

சீனிவாசனுக்காக வாதாடும் வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, “ஒரு அணிக்கு உரிமையாளராக இருப்பது தன்னிலே இரட்டை நலன் ஆகாது” என்றார்.

பிசிசிஐ விதிமுறை திருத்தம் 6.2.4 பிசிசிஐ நிர்வாகிகள், அலுவலர்கள் ஐபிஎல் அணியின் உரிமையாளராக செயல்பட வழிவகை செய்துள்ளது. ஆனால், பிரச்சினையே முரண்பட்ட இரட்டை நலந்தான் இப்போது வழக்கில் பெரும் பிரச்சினை.

இதனையடுத்து எந்தப் பின்னணியில் இந்த சர்ச்சைக்குரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கேள்வி எழுப்பியது.

“நீங்கள் அரசாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அமைப்பாக இருந்தாலும் சரி, மக்கள் நீங்கள் நடத்தும் போட்டிகள் நியாயமான முறையில் நடைபெறுகிறது என்ற உத்திரவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் இந்த புரிதல் மிக முக்கியமானது, அடிப்படையானது, நியாயமற்ற முறையில் ஆட்டம் நடத்தப்பட்டால் ஒருவரும் அதனை பின் தொடர மாட்டார்கள். ஆகவே இந்த விஷயத்தில் நீங்கள் தவறு செய்யக் கூடாது.

முரண்பட்ட இரட்டை நலம் இருக்கக் கூடாது என்றால் இருக்கக் கூடாது அவ்வளவுதான், பிசிசிஐ விதிமுறைகள் எங்களுக்கு ஒன்றும் புனிதமானதல்ல” என்று நீதிபதிகள் கூறியதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லாமல் வேறு அணியின் உரிமையாளர் பிசிசிஐ பதவியிலும் இருக்கிறாரா என்று கேள்வி கேட்டனர்.

SCROLL FOR NEXT