விளையாட்டு

ஸ்மித் சதத்தால் 530 ரன்கள் குவித்தது ஆஸி. : இந்தியா 108/1

கார்த்திக் கிருஷ்ணா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, ஆட்ட நேர முடிவில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 108 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை 530 ரன்களுக்கு முடித்தது.

வழக்கம்போல ஷிகர் தவான், முரளி விஜய்யுடன் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது. 15-வது ஓவரை வீசிய ஹாரிஸின் பந்தில் தவான் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

முரளி விஜய் 55*

ஆனால் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் சேர்ப்பு நிதானமாக இருந்தாலும் சீராக இருந்தது. இந்தத் தொடரில் இதுவரை சிறப்பாக ஆடி வந்துள்ள முரளி விஜய் இன்றும் தனது திறமையான பேட்டிங்கைத் தொடர்ந்தார். டெஸ்ட் போட்டிகளுக்கு உரிய பாணியில் 93 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 108 ரன்களை குவித்தது. விஜய் 55 ரன்களுடனும், புஜாரா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட 422 ரன்கள் இந்தியா பின்தங்கியுள்ளது.

ஸ்மித்தின் மூன்றாவது சதம்

இன்றைய நாளின் ஆரம்பத்தில், 259 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி. சீரான வேகத்தில் ரன் குவிக்கத் தொடங்கியது. விக்கெட் கீப்பர் ஹாடின் 75 பந்துகளில் தனது அரை சதத்தை அடைந்தார். கடந்த சில போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாடினுக்கு இந்த அரை சதம் பெரிய ஊக்கமாக அமையும்.

மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் 191 பந்துகளில் சதத்தை அடந்தார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்துள்ள மூன்றாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடக்கம். ஸ்மித் சதம் எடுத்த அதே ஓவரில் ஹாடின் 55 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித் - ஹாரிஸ் ரன் குவிப்பு

தொடர்ந்து வந்த ஜான்சன், தான் சந்தித்த 37 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசினாலும் 28 ரன்களுக்கு அஸ்வினின் சுழலுக்கு வீழ்ந்தார். உணவு இடைவேளைக்குப் பின், தொடர்ந்து ஆடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ரயன் ஹாரிஸ் ஜோடி இந்தியாவின் சொதப்பலான பந்துவீச்சை முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர். ஒரு நாள் போட்டியைப் போல அடுத்தடுத்து பவுண்டரிகளில் ரன் சேர்ந்தது.

ஹாரிஸ் 75 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். ஸ்மித் 273 பந்துகளில் 150 ரன்களை தொட்டார். அஸ்வினின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரை விளாசிய ஹாரிஸ், அடுத்த பந்தையும் விரட்ட முயல லெக் பிஃபோர் முறையில் ஆட்டமிழந்தார். இந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா 482 ரன்களை குவித்திருந்தாலும், ஸ்மித் இரட்டை சதம் எடுக்க வாய்ப்பிருந்ததால், அவர்கள் டிக்ளேர் செய்யவில்லை.

11 ரன்களுக்கு லயான் ஆட்டமிழக்க அடுத்த ஓவரில் ஸ்மித் 192 ரன்களுக்கு தனது ஸ்டம்பை பறிகொடுத்து இரட்டை சத வாய்ப்பை இழந்தார். முடிவில் ஆஸி. 530 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்தது.

சோபிக்காமல் போன பந்துவீச்சு

பல டெஸ்ட் போட்டிகளில் செய்த தவறையே இந்திய அணி இன்றைய போட்டியிலும் செய்தது. துவக்கத்தில் நன்றாக ஆடும் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்த இந்திய அணியின் பந்துவீச்சு, டெயில்எண்டர்ஸ் எனப்படும் எதிரணியின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களிடம் பலிக்காமல் போனது. ஆஸியின் பந்துவீச்சாளரான ரயன் ஹாரிஸ் ஒரு பேட்ஸ்மேனுக்கே உரிய நம்பிக்கையோடு இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டார்,

ஸ்மித்துடன் ஹாரிஸ் இணைந்து ரன் சேர்த்தது அவர்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. வெறும் 259 ரன்களை மட்டுமே நேற்று எடுத்திருந்த ஆஸி இன்று வலுவான ஸ்கோரை எட்டியதற்கு இந்திய பந்துவீச்சின் மோசமான யுக்தியே காரணம் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.

SCROLL FOR NEXT