விளையாட்டு

ஓய்வு பெறும் முடிவை தோனி மிக அமைதியாகவே தெரிவித்தார்: பிசிசிஐ செயலர்

பிடிஐ

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற முடிவு மிகவும் நிதானமாக அவரால் எடுக்கப்பட்ட முடிவே, அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார்.

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் பிசிசிஐ செயலர் சஞ்சய் படேலை தொலைபேசியில் அழைத்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக தோனி தெரிவித்துள்ளார்.

இது பற்றி சஞ்சய் படேல் கூறியதாவது: தோனி ஒரு எதார்த்தமான மனிதர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் எனக்கு தொலைபேசியில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். ஏன்? என்னாயிற்று? எதுவும் காயம் காரணமா? என்று கேட்டேன். தோனி அதற்கு, ‘இல்லை, நல்லதை நினைத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலக விரும்புகிறேன்’ என்றார். அவர் தனிச்சிறப்பான மனிதர், இந்தியாவின் கேப்டன். இது அவரது தனிப்பட்ட முடிவு அதனை மதிக்க வேண்டும்.

நான் மீண்டும் ஒரு முறை கேட்டேன், இதுதான் உங்கள் இறுதி முடிவா என்று. அதற்கு தோனி, ‘கொஞ்சம் பொறுங்கள் நான் மற்ற சக வீரர்களிடம் இதனை தெரிவித்து விடுகிறேன், பிறகு நீங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்றார். சிறிது நேரம் சென்ற பிறகு என்னை அழைத்த்து நான் சக வீரர்களிடம் தெரிவித்து விட்டேன் நீங்கள் அறிவிக்கலாம் என்றார். நான் உடனே அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், ஷிவ்லால் யாதவ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன், இருவருமே தோனியின் முடிவை மதிக்க வேண்டும் என்றனர்.

திடீர் முடிவு எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால் டெஸ்ட் போட்டிக்கு முன்னரே பேசினோம். ஆனால் ஒன்றை மட்டும் கூற முடியும். தோனி அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் தன் உடல் நிலை குறித்து நன்கு அறிவார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் குறும்போட்டிகளில் அவரது தலைமை பற்றி எந்த வித முணுமுணுப்புகளும் இல்லை. எனவே அந்த வடிவங்களில் மாற்றம் தேவையே இல்லை.” என்றார் சஞ்சய் படேல்.

SCROLL FOR NEXT