விளையாட்டு

இந்தியன் சூப்பர் லீக்: கொச்சி அணியை வாங்கினார் சச்சின் டெண்டுல்கர்

செய்திப்பிரிவு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கொச்சி அணியை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரும், கொல்கத்தா அணியை முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிரலமானதைத் தொடர்ந்து அதே பாணியில் கடந்த ஆண்டு பாட்மிண்டன் போட்டி நடத்தப்பட்டது. அந்த வரிசையில் சர்வதேச பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டி சேர்ந்துள்ள நிலையில், இப்போது இந்தியன் சூப்பர் லீக் என்ற பெயரில் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.

ஐஎம்ஜி மற்றும் ரிலையன்ஸ் சார்பில் இந்தியாவில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது. இதில் மும்பை, கொல்கத்தா, டெல்லி, குவாஹாட்டி, பெங்களுர், கொச்சி, கோவா, புணே ஆகிய 8 நகரங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

இதில் சென்னை அணியும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த அணிகளை ஏலம் விடும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. கொச்சி அணியை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து சச்சின் வாங்கினார். கொல்கத்தா அணியை தொழிலதிபர் ஹர்ஸ்வர்தன், சஞ்ஜிவ் கோனேகா, உத்சவ் பரேக் ஆகியோருடன் இணைந்து கங்குலி ஏலம் எடுத்தார்.

பிரபல இந்தி நடிகர்கள் சல்மான்கான் புணே அணியையும், ஜான் ஆபிரகாம் குவாஹாட்டி அணியையும், ரன்பிர் கபூர் மும்பை அணியையும், சன் டி.வி. நிறுவனம் பெங்களுர் அணியையும், தொழிலதிபர்கள் வேணுகோபால்,தத்தாராஜ், சீனிவாஸ் ஆகியோர் கோவா அணியையும், சமீர் மான்சந்த் நெட்வொர்க் டெல்லி அணியையும் ஏலம் எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT