மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றிலேயே வெளியேறிய வலிதான் 2011-ல் கோப்பை வெல்லும் உத்வேகத்தை அளித்தது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
2015 உலகக் கோப்பை கிரிக்கெட் விளம்பரத் தூதராக சச்சின் செயலாற்றுவதையடுத்து அதற்கொரு முன்னோட்டமாக எழுதிய கட்டுரையில் சச்சின் கூறியிருப்பதாவது:
"2007-ல் ஏற்பட்ட தோல்வியால் விளைந்த ஏமாற்றம், இந்திய அணியின் விமர்சகர்களை தவறு என்று உணரச்செய்யும் மன உறுதியை அளித்தது. மறக்கக்கூடிய ஒரு உலகக் கோப்பை என்றால் அது 2007 உலகக் கோப்பைதான் என்னைப் பொறுத்தவரை. முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது எனது கிரிக்கெட் வாழ்வின் மோசமான ஒரு தருணம். அருமையான அணியே அது! ஆனால் பெருமையற்று முடிந்தது போனோம். இதனையடுத்து உலகக் கோப்பை வெற்றி அணியில் இருக்க வேண்டும் எனது உத்வேகம் தொடர்ந்தது.
2009-ஆம் ஆண்டு ஊடகங்களிடம் நான் தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது. எதைச் சாதிக்க முடியுமோ அதற்கான திறமை உள்ளது என்று கூறினேன். 2011-ல் தொடக்க சுற்றுகளில் ரசிகர்களுக்கு சற்றே கவலை அளித்தோம். காலிறுதியில் நுழைந்த பிறகு அணியின் லட்சிய வேகம் கூடியது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி உள்நாட்டில் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெயர் பெற்றோம்.
எனது 22 ஆண்டுகால நோக்கம் நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி. எனது கிரிக்கெட் வாழ்வில் நாடே கொண்டாடிய அந்தத் தருணம் உயர்ந்த தருணம்.
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையும் சிறப்பு வாய்ந்தது, காரணம் முதல் முறையாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்தியது. அரையிறுதியில் இலங்கைக்கு எதிராக முக்கிய கட்டத்தில் நான் ஆட்டமிழந்தது என்னை சில காலங்கள் வாட்டியது, காரணம் அதன் பிறகே பேட்டிங் சரிவு ஏற்பட்டது. அதுவே அந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முடிவாகவும் ஆனது.
இந்த உலகக் கோப்பையில் நான் முதல் சதத்தை எடுத்தேன், பிறகு இலங்கைக்கு எதிராகவும் ஒரு சதம் எடுத்தேன்.
1999-ஆம் ஆண்டு இங்கிலாந்து உலகக் கோப்பை என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் போராட்ட நாட்கள். ஏனெனில் என் தந்தையின் இழப்பை நான் மனதளவில் எதிர்த்துப் போராட வேண்டியகாலம் அது. என்னுடைய துக்கத்தையும் மீறி நான் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் அபாரமாக விளையாடினார். ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள அனைவரும் பெரும் உத்வேகமடைந்தோம். கொஞ்சம் அதிகமாகவே உத்வேகம் அடைந்தோம், பெரிய ரன் இடைவெளியில் தோற்றோம். 11 ஆட்டங்களில் நான் 673 ரன்களை எடுத்தது என் நினைவில் நீங்கா இடம்பெற்றது. ரன்னராக இந்திய அணி வந்தாலும், தொடர் நாயகன் விருது எனக்குக் கிடைத்தது ஒரு சிறு ஆறுதல்.”
இவ்வாறு தனது கட்டுரையில் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்