ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிராக மத்தியப் பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 432 ரன்கள் குவித்தது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மத்தியப் பிரதேச அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 87 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. சக்சேனா 120, கேப்டன் பண்டேலா 21 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணியில் சக்சேனா 144 ரன்களில் (310 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன்) ஆட்டமிழக்க, பின்னர் ரமீஸ்கான் ரன் ஏதுமின்றியும், ஏ.பி.பேய்ஸ் 1 ரன்னிலும் வெளியேறினர். இதையடுத்து அங்கித் சர்மா களம்புகுந்தார்.
இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் பண்டேலா சதமடித்தார். அவர் 231 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜெயின் ரன் ஏதுமின்றியும், பி.எம்.டேட்டே 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, மத்தியப் பிரதேசம் 142.4 ஓவர்களில் 432 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அங்கித் சர்மா 76 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழகம்-112/4
பின்னர் ஆடிய தமிழக அணி முதல் ஓவரிலேயே பரத் சங்கரின் விக்கெட்டை இழந்தது. அவர் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்த அபராஜித் 5, தினேஷ் கார்த்திக் 6 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தமிழகம். இதையடுத்து அபிநவ் முகுந்துடன் இணைந்தார் இந்திரஜித். இந்த ஜோடி 65 ரன்கள் சேர்த்தது. 39 பந்துகளைச் சந்தித்த இந்திரஜித் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து முகுந்துடன் இணைந்தார் பிரசன்னா. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் தமிழகஅணி 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. முகுந்த் 37, பிரசன்னா 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
சுருக்கமான ஸ்கோர்: மத்தியப் பிரதேசம்-432 (சக்சேனா 144, பண்டேலா 104, ஹர்பிரீத் சிங் 65, அங்கித் சர்மா 62*, ரங்கராஜன் 7வி/135).தமிழகம்-112/4 (அபிநவ் முகுந்த் 37*, இந்திரஜித் 39, பிரசன்னா 16*, அங்கித் சர்மா 4வி/60)