விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்: யுவராஜ் சிங் அதிரடி சதம்; வலுவான நிலையில் பஞ்சாப்

செய்திப்பிரிவு

பாடியாலாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை பிரிவு பி ஆட்டத்தில் 3-நாம் நாளான இன்று பஞ்சாப் அணி வலுவான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் 273 ரன்களை பஞ்சாப் அணி எடுக்க, ஹரியாணா அணி 283 ரன்களை எடுத்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் பஞ்சாப் தனது 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

வெற்றி பெற 321 ரன்கள் இலக்குடன் ஆடி வரும் ஹரியாணா தன் 2-வது இன்னிங்சில் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் பஞ்சாபின் முதல் இன்னிங்ஸில் யுவராஜ் சிங் 59 ரன்களை எடுத்தார். பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆனால் 2வது இன்னிங்சில் யுவராஜ் சிங் இன்று வெளுத்துக் கட்டினார்.

160 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங் 14 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 130 ரன்களை அதிரடி முறையில் விளாசி, அமித் மிஸ்ரா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டாக யுவராஜ் ஆட்டமிழந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பஞ்சாப் கேப்டன் மந்தீப் சிங் டிக்ளேர் செய்தார்.

யுவராஜ் சிங்கின் அதிரடி சதம் பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

SCROLL FOR NEXT