இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு நாளை உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது.
பிலிப் ஹியூஸின் மரணத்தால் கிளார்க் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கிளார்க் மனரீதியாக வலுவானவர். அதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு உடற்தகுதி பெற்றுவிடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஹியூஸ் குடும்பத்துக்கு ஆதரவாக இருநத்தோடு, தன்னையும் நன்றாக வைத்துக்கொண்டார் கிளார்க். நாளை (இன்று) அவரை சந்திக்கவிருக்கிறேன். பின்னர் அவரை பேட்டிங் செய்ய வைத்து அவர் எப்படியிருக்கிறார் என பார்க்க வேண்டும். அவர் நன்றாக இருக்கும்பட்சத்தில் தேவையான அளவு ஓடவும், பேட்டிங் செய்யவும் முடியும். எங்கள் கேப்டன் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.