விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட் : தமிழ்நாடு 213 ஆல்அவுட்

செய்திப்பிரிவு

ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு தனது முதல் இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது. ரயில்வே முதல் இன்னிங் ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 3-வது நாளன்று 4 விக்கெட் இழப்புக்கு144 ரன்கள் என்கிற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய தமிழக அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. 72.4 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக, முகுந்த் 57, இந்திரஜித் 51 ரன்கள் எடுத்தார்கள். ரயில்வேயின் ஆசிஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ரயில்வே அணியும் தடுமாற ஆரம்பித்தது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் ரயில்வே தனது முதல் இன்னிங்ஸில் 41 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. தமிழகத்தின் ரங்கராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கழுத்தை தாக்கிய பந்து

ரயில்வே அணியை சேர்ந்த ரோஹன் போசேல் கழுத்தை பந்து தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அணியின் முதல் இன்னிங்ஸில் 63-வது ஓவரின்போது, ஆசிஷ் யாதவ் வீசிய பந்தை சதீஷ் ஸ்வீப் செய்தார். அப்போது ஃபார்வேர்ட் ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த 26 வயது ரோஹன் போசேலின் கழுத்தின் பின்னால் பந்து பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த ரோஹன் உடனடியாக வீரர்களின் ஓய்வறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோஹனின் நிலைமை குறித்து ரயில்வேயின் பேட்டிங் பயிற்சியாளர் சையத் ஜகாரியா கூறும்போது, “ரோஹன் நலமாக உள்ளார். ஸ்கேன் பரிசோதனைகளில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை (இன்று) அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றார்.

சுருக்கமான ஸ்கோர்

முதல் இன்னிங்ஸ்

தமிழ்நாடு 213 (முகுந்த் 57, இந்திரஜித் 51, ஆசிஷ் யாதவ் 6வி/68)

ரயில்வே 133/6 (பிரசாந்த் அவஸ்தி 41, ஆசிஷ் யாதவ்* 28 ரங்கராஜன் 3வி/54)

SCROLL FOR NEXT