விளையாட்டு

இந்திய அணிக்கு வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதென்றால் அது மெல்பர்ன் டெஸ்டில்தான்: ரிக்கி பாண்டிங்

பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடப்பு தொடரில் இந்தியா 0-2 என்று பின் தங்கியிருந்தாலும், மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ரிக்கி பாண்டிங்.

“இந்திய அணி ஒரு போட்டியில் வெல்லும் என்றால் அது மெல்பர்ன் மைதானத்தில்தான். ஆஸ்திரேலிய அணிக்குள் நடக்கும் விஷயங்களும், மெல்பர்ன் மைதான ஆட்டக்களமும் இந்திய அணிக்கு பொருத்தமாக இருக்கும். மந்தமான, ஃபிளாட் பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்திய அணிக்கு இங்கு ஒரு வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

ஆனால், ஆஸ்திரேலியா தாங்கள் வழக்கமாக ஆடும் விதத்தில் ஆடினால் மெல்பர்னிலும் 4 நாட்களில் ஆட்டம் முடிந்து விடும்.

தோனியின் தலைமையின் மீதும் இந்திய அணியின் அணுகுமுறை மீதும் ஏதேனும் விமர்சனம் இருக்குமேயானால், நான் அவர்களுக்குக் கூறுகிறேன், ஆக்ரோஷமான கிரிக்கெட்டிற்கான அறிகுறிகளை அவர் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் காண்பித்தார். கள வியூகமும் ஆக்ரோஷமாகச் செய்தார். ஆனால் இவையெல்லாம் அவர்கள் வெற்றிக்கு சாதகமாக வேண்டும்.

இந்தியாவில் விளையாடும் போது ஆட்டத்தை கொஞ்சம் கூடுதலாக இழுக்கலாம். ஆனால் அவ்வகை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆகாது. எனவே வெற்றிபெறவே இங்கு ஆட வேண்டும், ஏனெனில் 4 நாட்களில் ஆட்டத்தை முடிக்க அவர்கள் ஆடுவார்கள். நான் பார்த்த வரையில் ஆஸ்திரேலியாவில் விளையாடும் அணிகள் வேகமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியிருப்பதையே நான் அறிவேன்”

இவ்வாறு கூறினார் பாண்டிங்.

SCROLL FOR NEXT