விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்: சக்சேனா சதம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது மத்தியப் பிரதேசம். அந்த அணியை சேர்ந்த ஜலஜ் சக்சேனா சதம் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தமிழ்நாடு மத்தியப் பிரதேசம் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளான நேற்று டாஸ் வென்ற மத்தியப் பிரதேசம் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஆரம்பம் முதலே கவனமாக விளையாடியது மத்தியப் பிரதேச அணி.

முதல் விக்கெட்டுக்கு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சய் மிஸ்ரா 16 ரன்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜலஜ் சக்சேனாவும் ஹர்ப்ரீத் சிங்கும் 130 ரன்கள் குவித்தார்கள். ஹர்ப்ரீத் அதிரடியாக ஆடி 4 சிக்ஸர்கள் அடித்தார். அவர் 65 ரன்களில் ஆட்டமிழக்க, சக்சேனா மிகவும் பொறுப்பாக ஆடி சதம் எடுத்தார். இது, முதல்தரப் போட்டியில் அவருடைய 9-வது சதமாகும்.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் மத்தியப் பிரதேச அணி 87 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. ஜலஜ் சக்சேனா 120, கேப்டன் பண்டேலா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தமிழக அணி சார்பில் ஆல்ரவுண்டர் ரங்கராஜன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சுருக்கமான ஸ்கோர்: முதல் இன்னிங்ஸ்: மத்தியப் பிரதேசம் 250/4 (சக்சேனா 120*, ஹர்ப்ரீத் சிங் 65, ரங்கராஜன் 2வி/81)

SCROLL FOR NEXT