2015 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து முன்னாள் சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் விலகியுள்ளார். உடற்தகுதியின்மை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடாத டிப்சரேவிச், தற்போது அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் மூலம் 2015 சீசனை தொடங்கவிருந்தார். இந்த நிலையில் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனைப்படி சென்னை ஓபனில் இருந்து திடீரென விலகியுள்ளார். வரும் பிப்ரவரி மாதம் அவர் முழு உடற்தகுதி பெறுவார் என தெரிகிறது.
எலியாஸுக்கு வைல்ட்கார்டு
டிப்சரேவிச்சுக்குப் பதிலாக ஸ்விட்சர்லாந்து வீரர் எலியாஸ் யேமருக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது. எலியாஸ், உலகின் தலைசிறந்த ஜூனியர் வீரர்களில் ஒருவர் ஆவார்.
18 வயதாகும் எலியாஸின் தற்போதைய தரவரிசை 225 ஆகும். 2013 ஸ்விஸ் ஓபன் போட்டியின் (வைல்ட்கார்டு வீரராக) மூலம் ஏடிபி போட்டியில் அறிமுகமான எலியாஸ், அந்தப் போட்டியின் முதல் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவிடம் தோல்வி கண்டார். இந்த ஆண்டு நடைபெற்ற ஸ்விஸ் ஓபன் போட்டியில் 2-வது சுற்று வரை முன்னேறினார். இந்த ஆண்டில் மட்டும் 5 ஐடிஎப் பியூச்சர் போட்டிகளில் அவர் பட்டம் வென்றுள்ளார்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 5 முதல் 11 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.