விளையாட்டு

பிரிஸ்பனில் அளிக்கப்பட்ட உணவு குறித்து இசாந்த் சர்மா, ரெய்னா அதிருப்தி

பிடிஐ

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட உணவில் வெஜிடேரியன் வகைகள் இல்லாதது கண்டு ரெய்னா, இசாந்த் சர்மா அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிகளின் போது அளிக்கப்பட்ட பயிற்சிக்கான பிட்ச்கள் மோசமாக இருந்ததாக இந்திய அணி நிர்வாகமும் கேப்டன் தோனியும் குறைகூறியதையடுத்து 3ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது உணவு எடுத்துக் கொள்ள ரெய்னா, இசாந்த் சர்மா மைதானத்தை விட்டு வெளியே சென்றது புதிய சர்ச்சைகளைக் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 பயிற்சி ஆட்டங்களின் போது கொடுக்கப்பட்ட உணவும் இந்திய அணிக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனை பொறுப்பான அதிகாரிகளிடமும் இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை வெளிப்படையாக கூறவில்லை, காரணம் பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்கு அந்த நாடே துக்கம் அனுசரித்து வந்தது.

ஆனால் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்காகவென்றே இந்திய உணவுவகைகளை சமைக்கும் இந்தியரிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தது ஆஸ்திரேலியா.

ஆனால், பிரிஸ்பனில் மோசமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. முறையான வெஜிடேரியன் உணவுவகைகள் இல்லை. இது ஊடகங்கள் கவனத்திற்கும் வந்தது.

இதனையடுத்து பிரிஸ்பன் டெஸ்ட் 3ஆம் நாள் ஆட்டமான நேற்று ரெய்னா, இசாந்த் சர்மா அதிருப்தி அடைந்தனர். இவர்கள் இருவரும் அடிலெய்ட் மைதானத்திற்கு வெளியே சென்று தங்களுக்கான வெஜிடேரியன் உணவை வாங்கிக் கொண்டு வந்தனர். இவர்களுடன் ஐசிசி ஊழல் ஒழிப்புக் கமிட்டி நபர் ஒருவரும், அணி இயக்குநர் ரவிசாஸ்திரியும் சென்றனர்.

நம் ஊர் தியேட்டர்கள் போல், வெளியேயிருந்து கொண்டு வரும் பொருட்கள் மைதானத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. பிறகு இருவரும் வெளியே அமர்ந்து உணவு அருந்திவிட்டு பிறகு உள்ளே வந்துள்ளனர். ரெய்னா இந்த போட்டியில் விளையாடவில்லை. ஆனால் இசாந்த் சர்மா விளையாடி வருகிறார். உணவு இடைவேளைக்குப் பிறகு பந்து வீச வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது.

ஆட்டத்தின் நடுவே விளையாடும் வீரர் ஒருவர் மைதானத்திற்கு வெளியே சென்று வருவது இதற்கு முன்னால் நடந்ததில்லை. இது குறித்து ஐசிசி-யின் ஊழல் ஒழிப்பு கமிட்டி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT